சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 11 வீரர்களும் பந்துவீசியதன் மூலம் தில்லி அணி சாதனை படைத்துள்ளது.
தில்லி - மணிப்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தில்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய தில்லி அணி, ஒரே இன்னிங்ஸில் 11 வீரர்களையும் பந்துவீச வைத்து சாதனை படைத்துள்ளது.
தில்லி அணியில் மூன்று வீரர்கள் தலா மூன்று ஓவர்களையும், மூன்று வீரர்கள் தலா இரண்டு ஓவர்களையும் வீச, மீதமிருந்த 5 வீரர்கள் தலா ஒரு ஓவரை வீசி 20 ஓவர்களை முடித்துள்ளனர்.
தில்லி அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான பதோனி 2 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் உள்பட 8 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் இதுபோன்று எந்த ஒரு அணியும் செய்ததில்லை. 1884-ல் நடைபெற்ற இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரே இன்னிங்ஸில் 11 வீரர்களையும் பந்துவீச வைத்திருந்தது.