
தமிழக வீரர் நடராஜன் கடந்தாண்டு ஜூலை - ஆகஸ்டில் நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்ற பிறகு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனிடையே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்பட்டிருந்த நடராஜனை மெகா ஏலத்தில் ரூ. 10.75 கோடிக்குத் தேர்வு செய்தது தில்லி கேபிடல்ஸ் அணி .
ஐபிஎல் 2024-ல் சன்ரைசர்ஸுக்காக 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் ஹர்ஷல் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் நடராஜன். ஆனால், இம்முறை தில்லி கேபிடல்ஸின் விளையாடும் லெவனில் ஆரம்பத்திலிருந்து நடராஜனுக்கு நேரடியாக இடம் கிடைக்கவில்லை. ஒருவேளை காயத்திலிருந்து குணமடைந்து வந்ததால், உடற்தகுதியைக் காரணமாகக் கொண்டு அணியில் சேர்க்கப்படாமல் இருந்தாரா என்ற கேள்வியும் இருந்தது. இதற்கேற்ப தில்லி அணியில் முகேஷ் குமாரும் நன்றாகப் பந்துவீசாமல் இருந்தார். இதனால் நடராஜனை அணியில் சேர்க்கலாமே என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கின.
இதுகுறித்து தில்லி அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சென்னிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "இம்பாக்ட் வீரர் உள்பட அணியில் 12 வீரர்களைக் கொண்டே விளையாட முடியும். நடராஜனை எந்த இடத்தில் விளையாட வைக்க முடியும் என நீங்கள் கூறினால் எங்களுக்கு அது உதவும் என்று பதில் கூறி ஆச்சர்யப்படுத்தினார்.
ஒரு வழியாக தில்லி கேபிடல்ஸின் 11-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சோகம் நடராஜனை விட்டபாடில்லை. மழை காரணமாக கைவிடப்பட்ட அந்த ஆட்டத்தில் நடராஜனுக்குப் பந்துவீசும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
அடுத்து பஞ்சாப் கிங்ஸை மே 8 அன்று தரம்சாலாவில் எதிர்கொண்டது தில்லி கேபிடல்ஸ். இந்த ஆட்டத்திலும் நடராஜனுக்கு இடம் கிடைத்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப், ஆட்டம் தடைபடும் வரை 10.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டத்தில் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் கொடுத்து பந்துவீச, நடராஜன் மட்டும் தனது முதல் ஓவரில் வெறும் 4 ரன்களை கொடுத்தார். தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் 70 ரன்கள் எடுத்திருந்த பிரியான்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்தினார். எனினும் போர்ப்பதற்றம் காரணமாக இந்த ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதன் காரணமாக அந்த ஆட்டத்தில் எடுக்கப்பட்ட ரன்களும் நடராஜன் எடுத்த விக்கெட்டும் புள்ளிவிவரங்களில் கூட சேர்க்கப்படவில்லை.
சிறிது இடைவெளிக்குப் பிறகு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் குஜராத்துக்கு எதிராக விளையாடினார் நடராஜன். உருப்படியாக வாய்ப்பு கிடைத்த இந்த ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசிய நடராஜன் 49 ரன்கள் கொடுத்தார். முடிந்தது கதை. மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நடராஜன் மீண்டும் ஓரங்கட்டப்பட்டார். மும்பையிடம் தோற்ற தில்லி அணி, பிளேஆஃப் வாய்ப்பையும் இழந்தது.
இந்திய வெள்ளைப் பந்து அணியில் இடம்பிடிக்க எல்லா வீரர்களுக்கும் ஐபிஎல் போட்டியே பெரிய வாயிற்கதவாக உள்ளது. கடந்தாண்டு ஐபிஎல்-லில் 19 விக்கெட்டுகள் எடுத்தும் இந்திய அணியின் கதவு நடராஜனுக்குத் திறக்கப்படவில்லை. இம்முறை தில்லியின் பயிற்சியாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹேமங் பதானி இருந்தும் சரியான வாய்ப்புகள் அளிக்காமல் நடராஜனை வீணடித்து விட்டது தில்லி அணி. 34 வயது நடராஜன் தன்னை நிரூபித்து இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க அடுத்த ஐபிஎல் போட்டி வரை காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.