
ஐபிஎல் 2025-ல் மீதமுள்ள ஆட்டங்களில் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் விளையாட மாட்டார் என்பதால், முஸ்தபிஸுர் ரஹ்மான் மாற்று வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 போட்டி ஒரு வாரத்துக்கு நிறுத்தப்படுவதாக மே 9 அன்று அறிவிக்கப்பட்டது. மே 8-ல் பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையிலான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
போர் பதற்றம் தணிந்து மே 17 முதல் ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்கள் சிலர் இந்தியா திரும்புகிறார்கள். மேலும் சிலர் குறித்த தகவல்கள் உறுதிபடத் தெரியவில்லை.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தில்லி கேபிடல்ஸுக்காக விளையாடுகிறார். இவர் ஐபிஎல் போட்டிக்குத் திரும்பவில்லை என்று அறிவித்துள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 9 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்ட மெக்கர்க், 6 ஆட்டங்களில் மொத்தமே 55 ரன்கள் மட்டும் தான் எடுத்தார்.
எனவே, தில்லி அணியில் இவருக்குப் பதில் மாற்று வீரராக வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிஸுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ரூ. 6 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தில்லிக்காக ஏற்கெனவே ஐபிஎல் 2022 மற்றும் ஐபிஎல் 2023 ஆகிய ஆண்டுகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தில்லி கேபிடல்ஸ் 11 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு தில்லி கேபிடல்ஸுக்கு உள்ளது. எனினும் மிட்செல் ஸ்டார்க், டு பிளெஸ்ஸி மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளார்.