ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட ரிஷப் பந்துக்குத் தடை

பந்துவீச அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு மூன்றாவது முறையாக ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதால் நடவடிக்கை.
ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட ரிஷப் பந்துக்குத் தடை
ANI

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ. 30 லட்சம் அபராதம் மற்றும் ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி இரு ஆட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இதற்காக, தில்லி அணிக்கு இரு முறை அபராதம் விதிக்கப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக மே 7-ல் நடைபெற்ற ஆட்டத்திலும் தில்லி கேபிடல்ஸ் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பந்துவீசியது.

ஐபிஎல் நடத்தை விதிகளை மூன்றாவது முறையாக மீறியதற்காக தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ. 30 லட்சம் அபராதம் மற்றும் ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்பாக்ட் வீரர் உள்பட விளையாடும் லெவனில் இடம்பெற்ற மற்ற வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 12 லட்சம் அல்லது ஆட்ட ஊதியத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டில் எது குறைவோ, அதை அபராதமாகச் செலுத்த வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தில்லி கேபிடல்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை நாளை பெங்களூருவில் எதிர்கொள்கிறது. தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

12 ஆட்டங்களில் விளையாடி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் தில்லி, பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தச் சூழலில் ரிஷப் பந்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதனால், ஆட்ட நடுவரின் முடிவை எதிர்த்து தில்லி கேபிடல்ஸ் மேல்முறையீடு செய்தது. ஐபிஎல் நடத்தை விதிகள் பிரிவு 8-ன் படி தில்லி கேபிடல்ஸ் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

ஆட்ட நடுவரின் இந்த முடிவை பிசிசிஐ அதிகாரி மறுஆய்வு செய்தார். காணொளி வாயிலாக இதை விசாரித்த அவர், ஆட்ட நடுவரின் முடிவே இறுதியானது என்றார்.

இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in