
மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வான்கடேவில் நடைபெறும் ஆட்டத்தை மழை எச்சரிக்கையால் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தில்லி கேபிடல்ஸ் கோரிக்கை வைத்துள்ளது.
தில்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டல் ஐபிஎல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 போட்டி மே 17-ல் மீண்டும் தொடங்கிய பிறகு மழை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மே 17 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டுள்ள ஐபிஎல் நிர்வாகம், ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் இடையே மே 23 அன்று பெங்களூருவில் நடைபெறவிருந்த ஆட்டத்தை லக்னௌவுக்கு மாற்றியது. மே 23 அன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், பிளே ஆஃப் சுற்றுக்கு மட்டுமே வழக்கமாக வழங்கப்படும் கூடுதல் 2 மணி நேரம் மீதமுள்ள லீக் சுற்றுக்கும் வழங்கப்படும் என ஐபிஎல் அறிவித்துள்ளது. உதாரணத்துக்கு இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தின்போது மழை குறுக்கீடு ஏற்பட்டால், இரவு 9.30 மணிக்கு முன் எவ்வளவு தாமதமாக ஆட்டம் தொடங்கினாலும், தலா 20 ஓவர்கள் முழுமையாக விளையாடப்படும். இரவு 9.30 மணிக்குப் பிறகே ஓவர்கள் குறைக்கப்படும்.
இந்தச் சூழலில் ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கான கடைசி இடத்துக்குப் போராடும் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் மும்பை வான்கடேவில் மோதுகின்றன. இதில் மும்பை வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தில்லி கேபிடல்ஸ் இழக்கும். எனவே, தில்லிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி கட்டாயம். ஆனால், வான்கடேவின் இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். இது பிளே ஆஃப் சுற்றுக்கான தில்லியின் வாய்ப்பை சிரமமாக்கிவிடும்.
இதைக் கருத்தில் கொண்டு, மழை எச்சரிக்கையால் ஆட்டம் கைவிடப்படலாம் என்பதால் மும்பை இந்தியன்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான ஆட்டத்தை மாற்ற வேண்டும் என தில்லி இணை உரிமையாளர் பார்த் ஜிண்டல் ஐபிஎல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டம் மாற்றப்பட்டதை இவர் மேற்கோள் காட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எழுப்பும் கேள்வி
ஐபிஎல் நிர்வாகத்தின் முடிவு கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மீதமுள்ள ஆட்டங்களுக்கு கூடுதலாக 120 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2025 போட்டி மே 17 அன்று மீண்டும் தொடங்கியபோதே இந்த விதி நடைமுறையில் இருந்திருந்தால், கேகேஆர் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் இருந்திருக்கும் என்பது கேகேஆரின் வாதமாக உள்ளது.
மே 17 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை கேகேஆர் இழந்தது. கூடுதலாக 120 நிமிடங்கள் வழங்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்த நேரத்தைக் கேள்விக்குள்ளாக்கி கேகேஆர் தலைமைச் செயல் அலுவலர் வெங்கி மைசூர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.