
தில்லி கேபிடல்ஸ் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 போட்டிக்கான 10 அணிகளில் 9 அணிகள் தங்களுடைய கேப்டன்களை ஏற்கெனவே அறிவித்திருந்தன. தில்லி கேபிடல்ஸ் அணி மட்டும் அறிவிக்காமல் இருந்தது. கடந்த ஆண்டு தில்லி கேப்டனாக இருந்த ரிஷப் பந்த் இம்முறை லக்னெள சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறியதோடு அதன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுல், டு பிளெஸ்ஸிஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருந்தாலும் 2019 முதல் தில்லி அணிக்காக விளையாடி வரும் அக்ஷர் படேலை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது தில்லி கேபிடல்ஸ் நிர்வாகம்.
இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட 31 வயது அக்ஷர் படேல் தற்போது ஐபிஎல் அணியில் முழு நேர கேப்டனாக விளையாடவுள்ளார். கடந்த வருடம் ரிஷப் பந்த் இல்லாத சமயத்தில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் தில்லி அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்றார்.
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பு ரூ. 16.5 கோடிக்கு தில்லி அணியால் தக்கவைக்கப்பட்டார் அக்ஷர் படேல். ஐபிஎல் 2024-ல் 235 ரன்கள் எடுத்ததுடன் 11 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார்.
ஐபிஎல் போட்டியின் ஆரம்பத்தில் இருந்து விளையாடும் 8 அணிகளில் தில்லி, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய 3 அணிகள் மட்டுமே இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லாமல் உள்ளன. இதனால் புதிய கேப்டன், தில்லி அணிக்கு மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.