சாம்சன் அதிரடி வீண்: 5-வது இடத்துக்கு முன்னேறிய தில்லி அணி!

46 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்து வெளியேறினார் சாம்சன்.
5-வது இடத்துக்கு முன்னேறிய தில்லி அணி!
5-வது இடத்துக்கு முன்னேறிய தில்லி அணி!ANI

221 ரன்கள் குவித்து ராஜஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி அணி.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் தில்லி - ராஜஸ்தான் அணிகள் தில்லியில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

உலகக் கோப்பை அணியில் தன்னை தேர்வு செய்யாதது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்தும் வகையில் வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தை தந்தார் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க். வேகமாக ரன்களை சேர்த்த அவர் அரை சதம் அடித்து வெளியேறினார். 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் அவர் ஆட்டமிழக்க, அடுத்ததாக ஷாய் ஹோப் 1 ரன்னில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து போரெல் அருமையாக விளையாட, மறுமுனையில் அக்‌ஷர் படேல் 15 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய போரெல் அரை சதம் அடித்தார். அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. போரெல் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்திலேயே வெளியேறினார்.

இதன் பிறகு ரிஷப் பந்த் 15, குல்புதின் நைப் 19 ரன்களில் வெளியேற ஸ்டப்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து அவர் வெளியேற தில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை, ஜெயிஸ்வால் 4 ரன்களில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து கேப்டன் சாம்சன் அதிரடியாக விளையாடினார். பட்லர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு சற்று அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரியான் பராக். சாம்சனின் அதிரடியால் ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து 46 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்து அவர் வெளியேற ஆட்டம் முழுமையாக தில்லி அணி பக்கம் திரும்பியது.

அடுத்ததாக வந்த துபே 25, அஸ்வின் 2, பவல் 13 ரன்களில் வேகவேகமாக வெளியேற 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தில்லி அணியில் கலீல் அஹமது, முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் தில்லி அணி 12 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in