லக்னௌ தோல்வி: 14 புள்ளிகள் வரிசையில் இணைந்த தில்லி!

தில்லி அணி வெற்றி பெற்றாலும் மற்ற ஆட்டங்களின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தில்லி அணி வெற்றி!
தில்லி அணி வெற்றி!ANI

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் லக்னௌ - தில்லி அணிகள் தில்லியில் மோதின. டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தில்லி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. அதிகம் எதிர்பார்த்த மெக்கர்க் டக் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து அபிஷேக் போரெல் மற்றும் ஷாய் ஹோப் அருமையானக் கூட்டணி அமைத்தனர். இருவரின் அதிரடியால் அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. 94 ரன்களை சேர்த்த இந்த ஜோடியை ரவி பிஷனாய் பிரித்தார்.

ஹோப் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு போரெல் அரை சதம் அடித்தார். 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து போரெல் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் - ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடினர்.

ரிஷப் பந்த் 5 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஸ்டப்ஸ் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய லக்னௌ அணிக்கு மிக மோசமான தொடக்கம் அமைந்தது. ராகுல் 5, டி காக் 12, ஸ்டாய்னிஸ் 5, தீபக் ஹூடா 0, பதோனி 6 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற லக்னௌ அணி 71 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதைத் தொடர்ந்து பூரன் மட்டும் தனியாக போராடி அணியின் ஸ்கோரை உயர்த்த, அவருடன் யாரும் பெரிய கூட்டணி அமைக்கவில்லை. அதிரடியாக விளையாடிய பூரன் அரை சதம் அடித்தார். இவர் களத்தில் இருந்த வரை லக்னௌ அணிக்கான வெற்றி வாய்ப்பு இருந்தது. 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து பூரன் ஆட்டமிழக்க, ஆட்டம் மீண்டும் தில்லி அணி பக்கம் திரும்பியது.

இதன் பிறகு அர்ஷத் கான் அருமையாக விளையாடினார். 4 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக விளையாடி அர்ஷத் கான் அரை சதம் அடித்தார். ஆட்டம் மீண்டும் லக்னௌ அணி பக்கம் திரும்பியது. 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரைச் சிறப்பாக வீசிய முகேஷ் குமார் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். முடிவில் லக்னௌ அணியால் 189 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தில்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய அர்ஷத் கான் ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். தில்லி அணியில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் தில்லி அணி 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. லக்னௌ அணி 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. தில்லி அணிக்கு அனைத்து ஆட்டங்களும் முடிந்தது. இரு அணிகளுமே மற்ற ஆட்டங்களின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in