பெரிய இலக்கைப் போராடி விரட்டிய மும்பை தோல்வி!

15 பந்துகளில் அரை சதம் அடித்த ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், 27 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.
பெரிய இலக்கைப் போராடி விரட்டிய மும்பை தோல்வி!
பெரிய இலக்கைப் போராடி விரட்டிய மும்பை தோல்வி!ANI

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய முதல் ஆட்டத்தில் தில்லி - மும்பை அணிகள் தில்லியில் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தில்லி அனிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது. ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முதல் பந்திலிருந்து அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஏற்கெனவே அவர் 15 பந்துகளில் அரை சதம் அடித்து இந்தாண்டு ஐபிஎல்-ல் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

தொடர்ந்து அதிரடியாக மெக்கர்க் விளையாட 6 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்தது தில்லி அணி. இது ஐபிஎல் வரலாற்றில் தில்லி அணியின் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோராகும். 6.4 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது தில்லி அணி. போரெல் - மெக்கர்க் ஜோடி 114 ரன்கள் சேர்த்த பிறகு இந்த ஜோடி பிரிந்தது. 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து மெக்கர்க் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து போரெல் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஷாய் ஹோப் - ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து 53 ரன்கள் எடுக்க ஹோப் 5 சிக்ஸர்களுடன் 17 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு வந்த ஸ்டப்ஸும் அதிரடியாக விளையாட 16.1 ஓவர்களில் தில்லி அணி 200 ரன்களை எட்டியது. பந்த் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் வெளியேறினார்.

கடைசி வரை விளையாடிய ஸ்டப்ஸ் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. இது தில்லி அணியின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோராகும். இதற்கு முன்பு 2011-ல் 231 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ரோஹித் சர்மா 8 ரன்களில் கலீல் அஹ்மத் பந்தில் வெளியேறினார். இதன் பிறகு இஷான் கிஷன் 14 பந்துகளில் 20 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து திலக் வர்மா - ஹார்திக் பாண்டியா கூட்டணி அமைத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி 71 ரன்களை சேர்த்தனர். இவர்கள் விளையாடிய விதம் மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்தது. 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து பாண்டிய வெளியேற, அடுத்து வந்த வதேரா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களது விக்கெட்டை ரஷீக் தார் வீழ்த்தினார்.

17 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா ஆகியோர் களத்தில் இருந்தனர். 3 ஓவர்களில் 64 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து டேவிட் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

இதன் பிறகு நபி 7 ரன்களில் வெளியேறினார். சாவ்லா வந்தவுடன் சிக்ஸர் அடித்தார். கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். திலக் வர்மா 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தில்லி அணியில் அதிகபட்சமாக முகேஷ் குமார், ரஷீக் தார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தில்லி அணிக்கு இது 5-வது வெற்றியாகும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in