சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனி அளித்த ஆறுதல்: தில்லி வெற்றி!

தோனி 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார்.
20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தில்லி அணி
20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தில்லி அணிANI

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தில்லி அணி.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், தில்லி அணிகள் விசாகப்பட்டினத்தில் விளையாடின. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

பிரித்வி ஷா மற்றும் வார்னர் ஆகியோர் ஆரம்பத்தில் சற்று நிதானமாக விளையாடினாலும் 4 ஓவர்களுக்குப் பிறகு அதிரடியாக விளையாடினர். பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்தது தில்லி அணி. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இந்த கூட்டணி 93 ரன்களை சேர்த்தது. இதன் பிறகு வார்னர் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து முஸ்தபிஸுர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து பிரித்வி ஷா 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு அணியின் ஸ்கோரை எந்த கட்டதிலும் குறையாமல் பார்த்துக் கொண்டார் கேப்டன் ரிஷப் பந்த். அவருடன் யாரும் பெரிய கூட்டணியை அமைக்கவில்லை என்றாலும், அவர் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். மார்ஷ் 18 ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இவர்களது விக்கெட்டுகளை பதிரனா வீழ்த்தினார். அதிரடியாக விளையாடிய பந்த் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கடந்த இரு ஆட்டங்களிலும் கலக்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் கெயிக்வாட் ஆகியோர் அடுத்தடுத்து கலீல் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ரச்சின் ரவீந்திரா 2 ரன்களிலும், கெயிக்வாட் 1 ரன்னிலும் வெளியேறினர். இதைத் தொடர்ந்து மிட்செல் மற்றும் ரஹானே கூட்டணி அமைத்தனர். 9 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது. அருமையாக விளையாடிய இந்த ஜோடியை அக்‌ஷர் படேல் பிரித்தார்.

டேரில் மிட்செல் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 68 ரன்கள் சேர்த்தது. இதன் பிறகு ரஹானே 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் ரிஸ்வியும் வெளியேற சிஎஸ்கே அணி தடுமாறியது. இவர்களது விக்கெட்டை முகேஷ் குமார் வீழ்த்தினார். சிஎஸ்கே அணிக்கு கடைசி 6 ஓவர்களில் 89 ரன்கள் தேவைப்பட்டன.

ஷிவம் துபே 18 ரன்களில் வெளியேற, சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தோனி களமிறங்கி, முதல் பந்தில் பவுண்டரியை அடித்தார். இதன் பிறகு ஜடேஜா - தோனி கூட்டணியால் எவ்வளவு முயற்சித்தும் இலக்கை எட்ட முடியவில்லை.

இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதனால் தில்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். தில்லி அணியில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிஎஸ்கே அணி இன்று தோல்வி அடைந்தாலும், தோனியின் சிக்ஸர்களும் அதிரடி ஆட்டமும் ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்தன. கடந்த இரு சிஎஸ்கே ஆட்டங்களிலும் காத்திருந்தது இதற்காகத்தானே!

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in