
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய நியூசிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
நியூசிலாந்து வெற்றியடைந்தது மூலம் இந்திய அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் போட்டியிலிருந்து வெளியேறின.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். நியூசிலாந்தில் நேதன் ஸ்மித், டேரில் மிட்செல் பதில் கைல் ஜேமிசன், ரச்சின் ரவீந்திரா சேர்க்கப்பட்டார்கள். வங்கதேசத்தில் மஹ்மதுல்லா, நஹித் ராணா சேர்க்கப்பட்டார்கள்.
வங்கதேச தொடக்க பேட்டர் தன்ஸித் ஹசன், தொடக்கத்தில் சற்று அதிரடி காட்டினார். கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவும் ஜேமிசன் வீசிய 8-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார்.
இதனால், மைக்கேல் பிரேஸ்வெல் கொண்டு வரப்பட்டார். இவர் வந்தவுடனே தன்ஸித் ஹசன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் வங்கதேசம் 58 ரன்கள் எடுத்தது.
3-வது பேட்டராக களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 13 ரன்களில் வில் ஓ ரூர்க் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு எதிராக சதமடித்த தௌஹித் ஹிருதாய் இந்த முறை 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அனுபவ வீரர்கள் முஷ்பிகுர் ரஹிம், மஹ்மதுல்லாவும் கைக்கொடுக்காமல் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார்கள்.
விக்கெட்டுகள் விழுந்தாலும் நிதானம் காட்டி வந்த கேப்டன் ஷாண்டே 71 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஷாண்டோவும் ஜேகர் அலியும் கூட்டணியைக் கட்டமைப்பதற்கான பொறுமை காத்தார்கள். இதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரத்தில் ஷாண்டோ 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 40 ஓவர்களில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
ரிஷத் ஹொசைன் இந்த ஆட்டத்திலும் சற்று வேகமாக விளையாடினார். ஆனால், இந்த முறையும் பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
விக்கெட்டுகள் விழுந்துகொண்டு இருந்ததால், கடைசி வரை தாக்குப்பிடித்து விளையாட வேண்டிய பொறுப்பு ஜேகர் அலிக்கு இருந்தது. ஸ்டிரைக்குக்கு வர முயன்று 49-வது ஓவரில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஜேகர் அலி.
50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்த வங்கதேசம் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்தில் கடந்த ஆட்டத்தில் சதமடித்த வில் யங் இந்த முறை டக் அவுட் ஆனார். கேன் வில்லியம்சன் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 15 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது.
எனினும், டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா தடுமாறாமல் சற்று வேகமாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தினார்கள். 10 ஓவர்களில் நியூசிலாந்து 54 ரன்கள் எடுத்தது.
11-வது ஓவரிலிருந்து 5 ஓவர்களுக்கு பவுண்டரி இல்லை. 16-வது ஓவரில் கான்வே 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் நியூசிலாந்து 94 ரன்கள் எடுத்தது. டஸ்கின் பந்தில் பவுண்டரி எடுத்த ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்தார்.
இதன்பிறகு, ரச்சின் ரவீந்திரா இலக்கை நோக்கி நியூசிலாந்தை அழைத்துச் சென்றார். இதற்கு டாம் லேதம் அற்புதமாக ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார். இதனால், நியூசிலாந்தின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் கட்டுப்பாட்டில் இருந்தது.
காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பி இன்னிங்ஸை அற்புதமாகக் கட்டமைத்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா 95 பந்துகளில் சதமடித்தார். நியூசிலாந்து 38 ஓவர்களில் 200 ரன்களை தொட்டது. சதமடித்த ரச்சின் ரவீந்திரா 112 ரன்களுக்கு ரிஷத் ஹொசைன் பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிறப்பாக பேட் செய்த லேதம் ஒருநாள் கிரிக்கெட்டில் 26-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். கடைசி வரை இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லேதம் 55 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். கிளென் ஃபிளிப்ஸ், பிரேஸ்வெல் இணை நியூசிலாந்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்கள்.
46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரேஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ-விலிருந்து நியூசிலாந்து, இந்தியா அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. பாகிஸ்தான், வங்கதேசம் அணி போட்டியிலிருந்து வெளியேறின.