
துபாயில் மட்டும் விளையாடுவதால் இந்தியாவுக்கு இருக்கும் சாதகமான அம்சங்கள் குறித்த கேள்விக்கு கௌதம் கம்பீர் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. அரசியல் சூழல் காரணமாக பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்ததால், இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றன. அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுகளுக்கு இந்தியா தகுதி பெற்றதால், அதுவும் துபாயில் நடைபெறுகின்றன.
மற்ற அணிகள் வெவ்வேறு மைதானங்களில் விளையாடுவதால், துபாயில் மட்டுமே விளையாடி வரும் இந்தியாவுக்கு இது கூடுதல் நன்மையைத் தராதா என்ற விமர்சனங்கள் தொடக்கத்திலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றதும் இந்த விமர்சனங்கள் கூர்மையாகியுள்ளன.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இதுகுறித்து கூறியதாவது:
"முதலில் மற்ற அணிகளைப்போல எங்களுக்கும் இது பொதுவான இடம்தான். நாங்கள் இங்கு விளையாடியதில்லை. கடைசியாக இங்கு எப்போது விளையாடினோம் என்பதும் நினைவில் இல்லை. உண்மையில், அப்படியாக எதையும் நாங்கள் திட்டமிடவில்லை.
15 பேர் கொண்ட அணியில் இரு முன்னணி சுழற்பந்துவீச்சாளர்கள் தேவை என்பதுதான் திட்டம். அது பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, வேறு எங்காவது இருந்தாலும் சரி. இந்தப் போட்டி துணைக் கண்டத்தில் நடைபெறுவதால், நாங்கள் இரு முன்னணி சுழற்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்தோம்.
எனவே, சுழற்பந்துவீச்சைக் கொண்டு ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம் இல்லை. நீங்கள் பார்த்தால், முதலிரு ஆட்டங்களில் நாங்கள் ஒரு முன்னணி சுழற்பந்துவீச்சாளருடன் மட்டும் தான் களமிறங்கினோம். இந்த ஆட்டத்திலும் இதற்கு முந்தைய ஆட்டத்திலும் மட்டும்தான் இரு முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம்.
துபாயில் விளையாடுவதால் இந்தியாவுக்கு நிறைய நன்மைகள் இருப்பதாக விவாதங்கள் எழுகின்றன. எது நிறைய நன்மையைத் தருகிறது? நாங்கள் ஒரு நாள் கூட இங்கு (துபாய் மைதானம்) பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஐசிசி அகாடெமியில் தான் பயிற்சி மேற்கொள்கிறோம். அங்குள்ள சூழலும் இங்கு நிலவும் சூழலும் முற்றிலும் வித்தியாசமானவை.
சிலர் எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் முதிர்ச்சியடைய வேண்டும். எங்களுக்குச் சாதகமான அம்சங்கள் என்று எதுவுமில்லை" என்றார் கௌதம் கம்பீர்.