
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்பதற்காக தான் செய்த காரியம் குறித்து இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேல் பகிர்ந்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதமடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இடையில் கோலியால் சதமடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. காரணம், இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்கள் மற்றும் கோலி சதமடிக்கத் தேவையான ரன்கள் இரண்டு ஓரளவுக்கு சரிசமமாக இருந்தது. இதற்கு களத்தில் எதிர்முனையில் இருந்த அக்ஷர் படேல் வேகமாக விளையாடக் கூடாது என்ற நிலையும் இருந்தது.
அக்ஷர் படேல் களமிறங்கியபோது இந்தியாவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டன. கோலி 86 ரன்கள் எடுத்து விளையாடி வந்தார். எனவே, வெற்றிக்குத் தேவையான ரன்களில் 5 ரன்களுக்குக் கூடுதலான ரன்களை அக்ஷர் படேல் எடுத்துவிட்டால், கோலி சதமடிப்பது சவாலானதாகிவிடும். இதற்கிடையே, ஷஹீன் அஃப்ரிடி வைட் பந்துகளை வேறு வீசிக்கொண்டிருந்தார்.
எனவே, ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவது உறுதியானபோதிலும், விராட் கோலியால் ஒருநாள் கிரிக்கெட்டில் 51-வது சதத்தைப் பூர்த்தி செய்ய முடியுமா என்பது ரசிகர்களுக்குப் பதற்றமாக இருந்தது. இவற்றைக் கடந்துதான் விராட் கோலி சதம் அடித்தார்.
இந்த நேரத்தில் எதிர்முனையில் இருந்த தருணம் குறித்து அக்ஷர் படேல் மனம் திறந்துள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள காணொளியில் அக்ஷர் படேல் பகிர்ந்துள்ளார்.
"முதல்முறையாக அதிக அழுத்தம் கொடுத்த ஓர் ஆட்டத்தை ஓய்வறையிலிருந்து பார்க்க முடிந்தது. அதில் விராட் கோலி சதமடித்துள்ளார். 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்த பிறகு, ஆடுகளத்தில் விராட் கோலி ஓடியபடி ரன்கள் எடுத்த விதம், அவரது உடற்தகுதியைக் காட்டுகிறது.
இறுதியில், விராட் கோலி சதமடிப்பதற்காக நான்கூட கணக்குப் போட்டுக்கொண்டிருந்தேன். பந்து எதுவும் என்னுடைய பேட்டின் விளிம்பில்பட்டு சென்றுவிடக் கூடாது என்ற எண்ணம் இருந்தது. எனவே, அது சுவாரஸ்யமாக இருந்தது" என்றார் அக்ஷர் படேல்.