
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மதீஷா பதிரனாவை விளையாட வைக்காது என பிரபல பயிற்சியாளர் பிடாக் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 போட்டி வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வரும் ஞாயிறன்று சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அணியின் நம்பிக்கை வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரனாவை விளையாட வைக்காது என பிரபல பயிற்சியாளர் பிடாக் பிரசன்னா கூறியுள்ளார்.
தனது யூடியூப் சேனில் சிஎஸ்கே குறித்த தன் பார்வையை வெளிப்படுத்திய அவர், "பதிரனாவைத் தக்கவைக்க வேண்டாம் எனத் தலைதலையாக அடித்துக்கொண்டேனே, ஏலத்தில்விட்டு ஆர்டிஎம் முறையில் சிஎஸ்கே அவரை எடுத்திருக்கலாம். ஏலத்தில் எந்தவோர் அணியாலும் பதிரனா ரூ. 18 கோடிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என்று சொன்னதை யாராவது கேட்டார்களா... எஸ்ஏடி20 லீக் போட்டியில் அவரை நீக்கிவிட்டார்கள். எனவே சிஎஸ்கே அணியின் ஆரம்ப ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார். பந்துவீச்சு முறையை மாற்றியதால் குழப்பத்தில் உள்ளார் பதிரனா. யார்க்கர்களை அவரால் சரியாக வீச முடிவதில்லை" என்றார் பிடாக் பிரசன்னா.
எஸ்ஏ20 போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார் பதிரனா. நடந்து முடிந்த எஸ்ஏட20 போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மொத்தம் 11 ஆட்டங்களில் விளையாடியது. இதில் பதிரனா 6 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். அதிலும் 10.47 எகானமியில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே அவரால் வீழ்த்த முடிந்தது. இதனால், அணியிலிருந்து நீக்கப்பட்ட பதிரனா கடைசி லீக் ஆட்டம் மற்றும் எலிமினேட்டரில் விளையாடவில்லை. எஸ்ஏ20 போட்டிக்குப் பிறகு பதிரனா எந்தவோர் ஆட்டத்திலும் விளையாடவில்லை.