ருதுராஜ் கெயிக்வாடுக்குப் பதிலாக ஆயுஷ் மாத்ரே தேர்வு

சன்ரைசர்ஸில் ஆடம் ஸாம்பாவுக்குப் பதில் மாற்று வீரராக ஆர் ஸ்மரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ருதுராஜ் கெயிக்வாடுக்குப் பதிலாக ஆயுஷ் மாத்ரே தேர்வு
ANI
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் காயம் காரணமாக விலகிய நிலையில், 17 வயது ஆயுஷ் மாத்ரே மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாடுக்கு கடந்த மார்ச் 30 அன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தின்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்துக்குப் பிறகு இரு ஆட்டங்களில் ருதுராஜ் கெயிக்வாட் விளையாடினார். எனினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு இந்தக் காயம் காரணமாக போட்டியிலிருந்து அவர் வெளியேறினார். கேப்டன் பொறுப்பை எம்எஸ் தோனி ஏற்றார்.

இந்நிலையில், ருதுராஜ் கெயிக்வாடுக்குப் பதில் மாற்று வீரராக 17 வயது ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக இரு சதங்கள் அடித்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 7 இன்னிங்ஸில் 65.42 சராசரியில் 135.5 ஸ்டிரைக் ரேட்டில் 458 ரன்கள் குவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை 2024-ல் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். முதல் தர கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களில் விளையாடி இரு சதங்கள் உள்பட 504 ரன்கள் எடுத்துள்ளார்.

டி20யில் இதுவரை இவர் விளையாடியது இல்லை. இவர் ரூ. 30 லட்சத்துக்கு சிஎஸ்கேவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இவரும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதில் மாற்று வீரராக 21 வயது கர்நாடக வீரர் ஆர் ஸ்மரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடியது இல்லை. ரூ. 30 லட்சத்துக்கு சன்ரைசர்ஸால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸாம்பா சுழற்பந்துவீச்சாளராக இருந்தாலும், இடக்கை பேட்டரான ஸ்மரனையே சன்ரைசர்ஸ் தேர்வு செய்துள்ளது.

ஸ்மரன் 7 முதல் தர ஆட்டங்கள், 10 லிஸ்ட் ஏ ஆட்டங்கள் மற்றும் 6 டி20யில் விளையாடியுள்ளார். மொத்தம் 1,110-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in