ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே நூலிழையில் இழந்த வீரர்கள்!

2018 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடிய தீபக் சஹாரைத் தேர்வு செய்ய சிஎஸ்கே அணி கடுமையாக முயன்றது.
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே நூலிழையில் இழந்த வீரர்கள்!
1 min read

ஏலத்தில் சிஎஸ்கே அணி 20 வீரர்களைத் தேர்வு செய்திருந்தாலும் நூலிழையில் 13 வீரர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பையும் இழந்திருக்கிறது. அந்த 13 வீரர்களும் சிஎஸ்கேக்குக் கிடைத்திருந்தால் அணியின் தோற்றமே மாறிப் போயிருக்கும்.

கேஎல் ராகுலை அணிக்குள் கொண்டுவர மிகவும் போராடியது சிஎஸ்கே. அதிசயமாக அவருக்காக ரூ. 13.75 கோடி வரை சென்று பார்த்தது. கடைசியில் ரூ. 14 கோடிக்கு ராகுலைக் கொத்திச் சென்றது தில்லி.

கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் லியாம் லிவிங்ஸ்டனுக்காக ரூ. 8.50 கோடி வரை சென்றும் அவரை ரூ. 8.75 கோடிக்கு ஆர்சிபியிடம் இழந்தது சிஎஸ்கே.

சிஎஸ்கே தனது செல்லப் பிள்ளை தீபக் சஹாருக்காக ரூ. 9 கோடி வரை சென்று பார்த்தும் ரூ. 9.25 கோடிக்கு மும்பையிடம் இழந்தது.

வருங்காலத்தில் தோனி இடத்தில் ஜிதேஷ் சர்மாவை வைத்துப் பார்க்க முடிவு செய்து அவருக்காகக் கடுமையாகப் போராடியது. ரூ. 6.75 கோடி வரை சென்றும் கடைசியில் பஞ்சாப் கோரிய ஆர்டிஎம்-மையும் மீறி ரூ. 11 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி.

துஷார் தேஷ்பாண்டேவை மீண்டும் சிஎஸ்கேவுக்குள் இழுக்க ரூ. 6.25 கோடி வரை முயற்சி இருந்தது. அதைவிடவும் கூடுதலாக ரூ. 25 லட்சம் செலுத்தி துஷாரைத் தேர்வு செய்தது ராஜஸ்தான்.

ஆஸி. வீரர் மேக்ஸ்வெல்லுக்காக ரூ. 4 கோடி வரை கேட்டுப் பார்த்தது சிஎஸ்கே. ரூ. 4.20 கோடிக்கு அவரைத் தேர்வு செய்தது பஞ்சாப்.

ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாயுக்காக ரூ. 2.20 கோடி வரை சிஎஸ்கே முயன்றதில் ரூ. 2.40 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப்.

அதிரடி பேட்டர் அங்க்ரிஷ் ரகுவன்ஷியை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது கேகேஆர். அவருக்காக ரூ. 2.80 கோடி வரை முயன்றது சிஎஸ்கே.

சிர்மர்ஜீத் சிங்கை ரூ. 1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் தேர்வு செய்தது. ரூ. 1.40 கோடி வரை முயன்றது சிஎஸ்கே.

இதுதவிர ராபின் மின்ஸ், சமீர் ரிஸ்வி, குமார் குஷாக்ரா ஆகியோரையும் சொற்ப தொகைகளில் எதிரணிகளிடம் நூலிழையில் இழந்தது சிஎஸ்கே.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in