வித்தியாசமான டி20 பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வியடைந்த சிஎஸ்கே!

சென்னை ஆடுகளத்தை நன்கு அறிந்தது போல விளையாடிய தில்லி அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
வித்தியாசமான டி20 பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வியடைந்த சிஎஸ்கே!
ANI
2 min read

சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் தோல்வி. தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோற்று, புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்துக்கு இறங்கியுள்ளது. சென்னை ஆடுகளத்தை நன்கு அறிந்தது போல விளையாடிய தில்லி அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

பகல் நேர ஆட்டம் என்பதால் டாஸ் வென்ற தில்லி அணி கேப்டன் அக்‌ஷர் படேல், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனால் தொடர்ச்சியாக 4-வது முறையாக இலக்கை விரட்டும் நெருக்கடி சிஎஸ்கேவுக்கு ஏற்பட்டது. சிஎஸ்கே அணியில் ஓவர்டன், திரிபாதி இல்லை. அவர்களுக்குப் பதிலாக கான்வே, முகேஷ் செளதரி தேர்வானார்கள்.

கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே மெக்கர்க் டக் அவுட் ஆனார். முகேஷ் செளதரி வீசிய அடுத்த ஓவரில் அபிஷேக் போரெல் பொளந்து கட்டினார். 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர். இதனால் கலீல் அஹமது பவர்பிளேயிலேயே மூன்று ஓவர்கள் வீசி, ஓரளவு ரன்கள் கொடுப்பதைக் கட்டுப்படுத்தினார். பவர்பிளேயில் 51 ரன்கள் எடுத்தது தில்லி.

20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த அபிஷேக் போரெல், ஜடேஜா பந்தில் வீழ்ந்தார். கேஎல் ராகுல் ஆரம்பத்தில் சற்று நிதானமாக, 23 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஒரு பெரிய இன்னிங்ஸுக்கான அடித்தளத்தைக் கட்டமைத்தார். அக்‌ஷர் படேல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 14 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்த தில்லி, நூர் அஹமதுவின் 3-வது ஓவரில் 17 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 33 பந்துகளில் அரை சதமெடுத்தார். இதன்பிறகு 19-வது ஓவரில் முகேஷ் செளதரி ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது தில்லிக்கு. சமீர் ரிஸ்வி 20 ரன்கள் எடுத்து கலீல் அஹமது ஓவரில் வெளியேறினார். கேஎல் ராகுல் 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களும் சீராக ரன்கள் எடுத்துக்கொண்டே இருந்தார் தில்லி பேட்டர்கள். ஒரு பேட்டர் கடைசிவரை வந்தது வசதியாகப் போனது.

தில்லி அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே கிடைத்தாலும் இந்த ஆடுகளத்துக்கு இந்த ஸ்கோர் அப்போதே பெரிதாகத் தெரிந்தது. சிஎஸ்கே அணியில் கலீல் அஹமது, அஸ்வின், பதிரனா நன்குப் பந்துவீசினார்கள். முகேஷ் செளதரி, 4 ஓவர்களில் 50 ரன்களைக் கொடுத்து தில்லி அணியின் ஸ்கோர் 180 ரன்களைத் தாண்ட முக்கியக் காரணமானார்.

2019-க்குப் பிறகு சிஎஸ்கே அணி, 180+ ரன்களைத் தாண்டியதே கிடையாது. இந்த நிலையில் இந்தமுறையும் சிஎஸ்கேவுக்கு மோசமான பவர்பிளே அமைந்தது.

கான்வேயும் ரச்சின் ரவீந்திராவும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். 2-வது ஓவரில் 3 ரன்களில் ரச்சின் ரவீந்திராவும் 3-வது ஓவரில் ருதுராஜ் கெயிக்வாட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இந்தச் சோகம் போதாது என்று 13 ரன்களில் 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார் கான்வே. பவர்பிளேயில் சிஎஸ்கேவின் ஸ்கோர் - 48/3.

இந்த ஐபிஎல்-லில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் ஷிவம் துபே இன்று 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 18 ரன்களுக்கு நடையைக் கட்டினார். ஜடேஜா 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 11-வது ஓவரிலேயே களமிறங்கினார் தோனி.

அப்போது சிஎஸ்கேவின் வெற்றிக்கு 56 பந்துகளில் 110 ரன்கள் தேவை. ஒரு ஓவருக்கு 12 ரன்கள் தேவை என்பதால் அடுத்த 16 பந்துகளில் ஒரு பவுண்டரியும் அடிக்காமல் வித்தியாசமாக விளையாடினார்கள் தோனியும் விஜய் சங்கரும். 30 பந்துகளில் 78 ரன்கள் தேவை என்கிற நிலைமையிலும் அடுத்த 15 பந்துகளுக்கு ஒரு பவுண்டரியும் அடிக்காமல் மற்றொரு வித்தியாசமான டி20 அணுகுமுறையை வெளிப்படுத்தினார்கள் இருவரும். மைதானத்திலும் தொலைக்காட்சியிலும் இதைப் பார்த்த ரசிகர்கள், என்னடா நடக்குது இங்க என்பது போல தவித்துப் போனார்கள். மைதானத்துக்கு வந்த ரசிகர்களை ஏமாற்றாது 18-வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் தோனி. இதன் நடுவே 43 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் விஜய் சங்கர். கடைசியில் 20 ஓவர்களில் 158/5 ரன்கள் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆர்சிபிக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதற்கே சந்தோஷப்பட்டார் ருதுராஜ்.

விஜய் சங்கர் 69 ரன்களும் தோனி 30 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஐபிஎல்-லில் 6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (84) எடுத்த சிஎஸ்கே ஜோடி என்கிற சாதனையையும் படைத்தார்கள். எத்தனை பந்துகளில் இந்த ரன்கள் என்பதில் தான் சிஎஸ்கேவுக்கான முடிவாக அமைந்துவிட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in