முஸ்தபிஸுர், ரச்சின் கலக்கல் அறிமுகம்: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி

முஸ்தபிஸுர் 4 விக்கெட்டுகளை எடுக்காமல் போயிருந்தால் ஆர்சிபி 200 ரன்கள் கூட எடுத்திருக்க வாய்ப்புள்ளது.
ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திராANI

வெற்றியுடன் தனது கணக்கைத் தொடங்கியுள்ளார் சிஎஸ்கேவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட். சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் 2024 முதல் ஆட்டத்தில் 18.4 ஓவர்களில் இலக்கை விரட்டி ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே.

டாஸ் வென்ற ஆர்சிபி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆர்சிபி இன்னிங்ஸ் அமர்க்களமாகவே தொடங்கியது. சேப்பாக்கம் ஆடுகளத்துக்கு நன்குப் பழகிய டு பிளெஸிஸ், சஹார் வீசிய 3-வது ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்தார். கோலிக்கு ஸ்டிரைக் வழங்காமல் அவரே பவர்பிளேயில் பெரும்பாலும் ஆடியதால் ஆர்சிபிக்கு நல்ல பலன் கிடைத்தது. ஆனால், 5-வது ஓவரில் முஸ்தபிஸுர், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியைத் தந்தார். 8 பவுண்டரிகளை அடித்து மிரட்டிக் கொண்டிருந்த டு பிளெஸிஸை 35 ரன்களுக்கு வீழ்த்தினார். டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடிய படிதார், அதே ஓவரில் டக் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் கிளென் மேக்ஸ்வெலை டக் அவுட் செய்தார் சஹார். திடீரென 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும் ஆர்சிபிக்கு பவர்பிளேயில் 42 ரன்கள் கிடைத்தன.

டி20யில் மொத்தமாக 12,000 ரன்களை எடுத்துள்ள கோலி, சற்று நிதானமாகவே விளையாடினார். 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து முஸ்தபிஸுர் பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கிரீனும் 18 ரன்களை ஆட்டமிழக்க, 12-வது ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஆர்சிபி. களத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் வீரர் அனுஜ் ராவத். இரு ஓவர்களுக்கு பவுண்டரிகளே அடிக்காமல் விளையாடினார்கள். கடைசி ஆறு ஓவர்களில் வேகத்தைக் கூட்டினார்கள். ரன்கள் வர ஆரம்பித்தன. தேஷ்பாண்டே வீசிய 18-வது ஓவரில் 25 ரன்கள் கிடைத்தன. அடுத்த ஓவரில் 16 ரன்கள். இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் கிடைத்தன. அனுஜ் ராவத் 48 ரன்கள் எடுத்துக் கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார். டிகே ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்தார். முஸ்தபிஸுர் 4 விக்கெட்டுகளை எடுக்காமல் போயிருந்தால் ஆர்சிபி 200 ரன்கள் கூட எடுத்திருக்க வாய்ப்புள்ளது. இப்படி முதல் இன்னிங்ஸ் இரு அணிகளுக்குமே சில மகிழ்ச்சிகளையும் கவலைகளையும் அளித்தது.

சிஎஸ்கே ஆரம்பத்திலிருந்து பவுண்டரிகளை அடித்துக்கொண்டே இருந்தது. 3 பவுண்டரிகளை அடித்து யஷ் தயால் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் புதிய கேப்டன் ருதுராஜ். இளம் புயல் ரச்சின் ரவீந்திரா, சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து பவர்பிளேயில் சிஎஸ்கே 1 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் குவிக்க உதவினார். ஆனால் 7-வது ஓவரில் 15 பந்துகளில் 37 ரன்களுடன் ஆட்டமிழந்தார். சிஎஸ்கேவுக்கான முதல் ஆட்டத்திலேயே 247 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். சிஎஸ்கே அணியின் அடுத்த நட்சத்திரமாக இவரை எண்ணும் அளவுக்கு முதல் ஆட்டத்திலேயே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.

மற்றொரு சிஎஸ்கே புதுமுகம், டேரில் மிட்செல் கரன் சர்மா ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்தார். இதேபோல இரு சிக்ஸர்கள் அடித்த ரஹானே, 27 ரன்களிலும் மிட்செல் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் டுபேவும் சூழலைப் புரிந்து கவனமாக விளயாடினார்கள். விக்கெட்டை இழந்து நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் என்கிற அவர்களுடைய பக்குவம் சிஎஸ்கேவுக்குப் பெரிதும் உதவியது.

18.4 ஓவர்களில் இலக்கை விரட்டி ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே. டுபே 34, ஜடேஜா 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதையடுத்து, சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவிடம் தொடர்ச்சியாக 8 முறை ஆர்சிபி தோல்வியடைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in