சன்ரைசர்ஸ் அணியை நொறுக்கியது சிஎஸ்கே

10 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது...
சன்ரைசர்ஸ் அணியை நொறுக்கியது சிஎஸ்கே
ANI

இரு தோல்விகளுக்குப் பிறகு அதுவும் ஒரே அணிக்கு எதிராக எனும்போது எந்த அணியும் நிலைகுலைந்துதான் போகும். சிஎஸ்கே இன்று சன்ரைசர்ஸுக்கு எதிராக விளையாடி மீண்டும் வெற்றியை அடைந்து புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு மேலேறி உள்ளது. லக்னெளவிடம் வீழ்த்தப்பட்ட கோட்டை மீண்டும் சிஎஸ்கே வசமாகியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. பனிப்பொழிவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். முடிவு, இதற்குச் சாதகமாக அமையவில்லை.

ரஹானே 9 ரன்கள் எடுத்து சொற்ப ரன்களுக்கு இன்னொருமுறை ஆட்டமிழந்தபோது சிஎஸ்கே ரசிகர்களுக்குக் கிலி ஏற்பட்டிருக்கும். 7 ஆட்டங்களில் ஒரு அரை சதமும் எடுக்காத டேரில் மிட்செலுக்கு இன்னொரு வாய்ப்பை அளித்தது சிஎஸ்கே. இது வழக்கமான சிஎஸ்கே பாணி. அவரும் அதற்கு ஏற்றாற்போல் நன்கு விளையாடி பெரிய பிரச்னையைத் தீர்த்து வைத்தார். பவர்பிளேயில் 50 ரன்கள் கிடைத்தன.

ருதுராஜ் கெயிக்வாட் இன்றும் சிறப்பாக விளையாடி 27 பந்துகளில் அரை சதமெடுத்தார். மிட்செல் 29 பந்துகளில் அரை சதமெடுத்து சிஎஸ்கே அணி பெரிய ஸ்கோர் எடுக்க தன்னாலான உதவியைச் செய்தார். பிறகு 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 11-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது சிஎஸ்கே. ஷிவம் துபே வழக்கம்போல விளையாடினார். சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ், கடைசி ஓவரில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் களமிறங்கி ரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்தார் தோனி. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். ஷிவம் டுபே ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்தார். தோனி ஆட்டமிழக்காமல் 5 ரன்கள். சிஎஸ்கே 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள்.

சன்ரைசர்ஸின் அதிரடி ஆட்டத்தை அனைவரும் எதிர்பார்த்தபோது இன்று விளையாடியது வேறொரு சன்ரைசர்ஸாக இருந்தது. டிராவிஸ் ஹெட், 2-வது ஓவரில் 13 ரன்களுக்கு தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்தப் பந்தில் புதிய பேட்டர் அன்மோல்ப்ரீத் சிங் டக் அவுட் ஆனார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறிய சன்ரைசர்ஸ், அதன்பிறகு மீண்டெழ முடியாமல் போனது. அபிஷேக் சர்மா, 15 ரன்களுக்கு தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழக்க, பவர்பிளேயிலேயே ஆட்டத்தைத் தன்வசமாக்கியது சிஎஸ்கே.

ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்ததால் மார்க்ரமும் நிதிஷ் குமார் ரெட்டியும் நிதானமாக விளையாடினார்கள். 15 பந்துகளில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் நிதிஷ் குமார். மார்க்ரம் 32 ரன்களுக்கும் கிளாஸன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து சன்ரைசர்ஸின் தோல்வியை உறுதி செய்தார்கள். கடைசியில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது சன்ரைசர்ஸ். தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளும் மிஸ்தாபிஃஸுர் ரஹ்மான், பதிரனா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே. சென்னை ரசிகர்களுக்கு இன்று நல்ல நாள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in