ராஜஸ்தானை வீழ்த்தி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே

சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை மே 18-ல் பெங்களூருவில் எதிர்கொள்கிறது.
ராஜஸ்தானை வீழ்த்தி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே
ANI

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் மோதின. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் 11-வது முறையாக டாஸில் தோற்றார். சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தானில் தொடக்க பேட்டர்களாக வழக்கம்போல் ஜெயிஸ்வால், பட்லர் களமிறங்கினார்கள். சிஎஸ்கேவில் துஷார் தேஷ்பாண்டேவும், தீக்‌ஷனாவும் பந்தைக் கையிலெடுத்தார்கள். முதல் மூன்று ஓவர்களில் பட்லர், ஜெயிஸ்வாலை அதிரடியாக விளையாட அனுமதிக்கவில்லை.

தீக்‌ஷனா வீசிய 4-வது ஓவரில் ஜெயிஸ்வால் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார். ஷார்துல் தாக்குர் வீசிய அடுத்த ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார் ஜெயிஸ்வால். பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்தது.

பவர்பிளே முடிந்தவுடன் சிமர்ஜீத் சிங்கை கொண்டு வந்தார் கெயிக்வாட். முதல் விக்கெட்டாக ஜெயிஸ்வால் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தனது அடுத்த ஓவரில் பட்லர் விக்கெட்டையும் வீழ்த்த, ராஜஸ்தான் ரன் வேகம் மேலும் குறைந்தது. ஜடேஜாவும் தனது முதல் மூன்று ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் சிறப்பாகப் பந்துவீசினார்.

10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் எடுத்திருந்தது. பவர்பிளே முடிந்து 15-வது ஓவர் வரை பவுண்டரி இல்லாமல், இரு சிக்ஸர் மட்டுமே ராஜஸ்தான் அடித்திருந்ததால், சஞ்சு சாம்சன் பெரிய ஷாட்டுக்கு செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. விளைவாக, சிமர்ஜீத் சிங் பந்தில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன்.

15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 94 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஆட்டத்தில் அணிக்குத் திரும்பிய துருவ் ஜுரெல் வந்த வேகத்தில் ஷார்துல் பந்தில் சிக்ஸர் அடித்தார். முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை சிமர்ஜீத் சிங், கடைசி ஓவரில் மட்டும் இரு பவுண்டரிகளை கொடுத்தார்.

கடைசி கட்ட ஓவர்களில் குறைவான வேகத்திலும், ஷார்டாகவும் வீசி நீண்ட நேரம் களத்திலிருந்த பராக்கைத் தடுமாறச் செய்தது தேஷ்பாண்டே - ஷார்துல் இணை. 19-வது ஓவரை வீசிய ஷார்துல் பவுண்டரி கொடுக்காமல் பந்துவீசினார். தேஷ்பாண்டே 18 மற்றும் 20-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸர் மட்டும் கொடுத்தாலும், கடைசி ஓவரில் ஜுரெல் மற்றும் ஷுபம் துபே விக்கெட்டை வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கேவில் தொடக்க பேட்டர்களாக ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் களமிறங்கினார்கள். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைவாக இருந்ததால், ருதுராஜ் விக்கெட்டை பாதுகாத்து விளையாட வேண்டும், ரச்சின் துரிதமாக ரன் சேர்க்க வேண்டும் என சிஎஸ்கேவின் இவர்களுடைய பேட்டிங்கில் வெளிப்பட்டது.

சந்தீப் சர்மா வீசிய இரண்டாவது ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா சிக்ஸர் அடித்தார். போல்ட் வீசிய 3-வது ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்தார். 3 ஓவர்களில் சிஎஸ்கே 28 ரன்களுக்கு விரைந்தது.

இதனால், அஸ்வினை பந்துவீச அழைத்தார் சஞ்சு சாம்சன். இவரது பந்தையும் அதிரடியாக விளையாட முயன்று தூக்கி அடித்தார் ரச்சின் ரவீந்திரா. ஆனால், சரியான டைமிங் இல்லாததால் அவரிடமே கேட்ச் ஆனார். இவர் 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து தனது பணியைச் சிறப்பாக முடித்துவிட்டு கிளம்பினார்.

ரச்சின் ரவீந்திரா விட்ட இடத்திலிருந்து டேரில் மிட்செல் பவுண்டரி அடிக்கத் தொடங்கினார். பவர்பிளே முடிவில் சிஎஸ்கே 56 ரன்கள் எடுத்து நல்ல நிலையை அடைந்தது.

பவர்பிளே முடிந்தவுடன் இம்பாக்ட் வீரராக உள்ளே வந்த பர்கர் பந்துவீசினார். இவரது பந்தை சிக்ஸருக்கு அனுப்பி ருதுராஜ் தனது பவுண்டரி கணக்கைத் தொடங்கினார். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 6-க்குக் கீழ் குறைந்தது.

ராஜஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் யுஸ்வேந்திர சஹால் வந்தார். முதல் ஓவரிலேயே மிட்செல் விக்கெட்டை வீழ்த்தினார். மிட்செல் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

இரு விக்கெட்டுகள் விழுந்தவுடன் சிஎஸ்கேவின் ரன் வேகம் அடங்கியது. மொயீன் அலியும் பெரிய ஷாட்டுக்கு செல்லவில்லை. 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 77 ரன்கள் எடுத்தது.

31 பந்துகளாக பவுண்டரியே போகாததால், பர்கர் பந்தில் மொயீன் அலி சிக்ஸர் அடிக்கப் பார்த்து 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி 7 ஓவர்களில் 50 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, அஸ்வின் ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகள் அடித்து நெருக்கடியை அப்படியே தணித்தார் ஷிவம் துபே. ஆனால், இதே ஓவரின் கடைசிப் பந்தில் அவர் விக்கெட்டையும் இழந்தார்.

எனினும், ருதுராஜ் களத்தில் நின்றுகொண்டே இருந்தார். அடுத்து வந்த ஜடேஜாவும் சஹால் சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால், பவுண்டரி எல்லையில் பட்லர் அதை சிறப்பாகத் தடுத்தார். இதனால், ரன் ஓட வேண்டிய நெருக்கடியில் ஜடேஜா ஓடிக் கொண்டே இருந்தார். ஒருமுறை த்ரோ சரியாக வீசப்பட்டிருந்தால், ருதுராஜ் ஆட்டமிழந்திருக்கக்கூடும்.

இறுதியில் இந்த ஓட்டமே ஜடேஜாவுக்கு எதிரியாக மாறியது. தேர்ட் மேன் திசையில் நேராக ஃபீல்டரிடம் அடித்து இரண்டாவது ரன்னுக்கு முயற்சித்தார். ருதுராஜ் அவரைத் திருப்பி அனுப்ப, சஞ்சுவின் த்ரோ ஜடேஜா மீது விழுந்தது.

அப்ஸ்டரக்டிங் த ஃபீல்ட் முறையில் ஜடேஜா வெளியேற்றப்பட்டார்.

எனினும், 24 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்ததால், சிஎஸ்கே அணி பதற்றம் இல்லாமல் இருந்தது. சந்தீப் ஓவரில் சமீர் ரிஸ்வி ஒரு பவுண்டரியும், பர்கர் பந்தில் ருதுராஜ் ஒரு சிக்ஸரும் அடிக்க கடைசி இரு ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

போல்ட் வீசிய 19-வது ஓவரில் ரிஸ்வி முதலிரு பந்துகளில் இரு பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே வெற்றியை உறுதி செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ருதுராஜ் 41 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். ரிஸ்வி 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

10 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in