பஞ்சாபைப் பழிவாங்கி 3-வது இடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே!

ஜடேஜா 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
பஞ்சாபைப் பழிவாங்கி 3-வது இடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே!
பஞ்சாபைப் பழிவாங்கி 3-வது இடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே!ANI

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய முதல் ஆட்டத்தில் பஞ்சாப் - சிஎஸ்கே அணிகள் தரம்சாலாவில் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சிஎஸ்கே அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானே இந்த ஆட்டத்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு கெயிக்வாட் - மிட்செல் சிறப்பான கூட்டணியை அமைத்தனர்.

இருவரும் அதிரடியாக விளையாட பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணி 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ராகுல் சஹார் சிறப்பாக பந்துவீச கெயிக்வாட் மற்றும் துபே அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். கெயிக்வாட் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 32 ரன்களும், துபே முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். துபே முந்தைய ஆட்டத்திலும் முதல் பந்திலேயே வெளியேறினார்.

இதன் பிறகு மிட்செல் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே அணி தடுமாறியது. ஜடேஜா - மொயீன் அலி கூட்டணி மெதுவாக ரன்களை சேர்த்தது. மொயீன் அலி 20 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஷார்துல் தாக்குர் ஆறுதல் அளிக்கும் வகையில் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

19-வது ஓவரை மிகவும் சிறப்பாக வீசினார் ஹர்ஷல் படேல். தோனியை முதல் பந்திலேயே போல்ட் செய்தார். ரன் எதுவும் எடுக்காமல் தோனி வெளியேற ஜடேஜா மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார்.

ஜடேஜா 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பேர்ஸ்டோ 7 ரன்களிலும், ரிலீ ரூசோவ் ரன் எதுவும் எடுக்காமலும் தேஷ்பாண்டே பந்தில் போல்ட் ஆகி வெளியேறினர். இதைத் தொடர்ந்து பிரப்சிம்ரன் - ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தனர். 6 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு ஜடேஜா ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார். அவருடன் இணைந்து சிமர்ஜீத் சிங்கும் சிறப்பாக பந்துவீசினார்.

ஷஷாங்க் சிங் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்ததாக பிரப்சிம்ரன் 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஜிதேஷ் சர்மா டக் அவுட் ஆனார். கேப்டன் சாம் கரண் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 16 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து தடுமாறியது பஞ்சாப் அணி. ராகுல் சஹார் - பிரார் ஜோடி ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடியது. சஹார் 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், சிமர்ஜீத் சிங் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in