
சிஎஸ்கே, மும்பை அணிகள் விளையாடும்போது அந்த ஆட்டம் பரபரப்பாக முடியாமல், கடைசி வரை நீளாமல் இருக்குமா?
ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அதுதான் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து சிஎஸ்கே வெற்றி. ரசிகர்களின் வேண்டுதலை நிறைவேற்றியபடி தோனி விளையாட வந்தார், நீ பொட்டு வைத்த தங்கக் குடம் பாடலின் பின்னணியில்.
மும்பை எடுத்த 155 ரன்களைத் தாண்டுவது சிஎஸ்கேவுக்குச் சுலபமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் போட்டியில் அறிமுகமான மும்பை வீரர் விக்னேஷ் புதூர், ஆட்டத்தின் போக்கை மாற்றி, சிஎஸ்கேவுக்குச் சற்று சிரமமளித்தார். நன்கு விளையாடி அரை சதமெடுத்த ருதுராஜ் மற்றும் ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோர் அவர் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்கள். இதனால் விக்னேஷின் கடைசி ஓவரை கடைசி வரைக்கும் பாதுகாத்து வைத்தார் சூர்யகுமார்.
சிஎஸ்கே பேட்டர்கள் பலரும் இன்று சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, தீபக் ஹூடா, சாம் கரண் என முக்கிய பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும் ருதுராஜும் ரச்சின் ரவீந்திராவும் பிரமாதமாக, ஆளுக்கொரு பாணியில் விளையாடினார்கள். 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடித்து 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார் ருதுராஜ். ரச்சின் ரவீந்திரா 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தாலும் சேப்பாக்கம் ஆடுகளத்துடன் ஒத்துப்போக அவருக்குச் சிறிது நேரம் பிடித்தது. விக்கெட்டுகளும் மறுமுனையில் வீழ்ந்ததால் தற்காப்பு நடவடிக்கையுடனே பெரும்பாலும் விளையாடினார். ஆட்டமிழக்காமல் 65 ரன்களுடன் கடைசியில் சிக்ஸர் அடித்து, சிஎஸ்கேவுக்கு இந்த வருடம் முதல் வெற்றியை அளித்தார் ரச்சின் ரவீந்திரா. கடைசி ஓவருக்கு முன்பு களமிறங்கிய தோனி, ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் என்ன, அவர் மைதானத்துக்குள் வந்ததே ரசிகர்களுக்குப் போதுமே!
பும்ரா, (இந்த ஆட்டத்துக்கு மட்டும்) பாண்டியா இன்றி களமிறங்கிய மும்பை அணி - விக்னேஷ் புதூர் (அறிமுகம்), சத்யநாரயண ராஜு என்கிற இரு புது வீரர்களுடன் விளையாடியது. முதல் ஓவரிலேயே கலீல் அஹமது பந்தில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். பிறகு ரையன் ரிக்கெல்டன், வில் ஜாக்ஸை இழந்து தடுமாறிய மும்பை பவர்பிளேயில் 52 ரன்கள் எடுத்திருந்தது. ஆரம்பத்தில் கலீல் அஹமதுவும் நடு ஓவர்களில் நூர் அஹமதுவும் மும்பை ஆதிக்கம் செலுத்த விடாமல் பார்த்துக்கொண்டார்கள். நேதன் எல்லீஸ், அஸ்வின், ஜடேஜா ஆகிய மூவரும் கூட நன்கு பந்துவீசியதால் மும்பையால் எந்தத் தருணத்திலும் மேலெழ முடியாமல் போனது. கடைசி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது மும்பை. கடைசியில் தீபக் சஹார், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து மும்பை ஸ்கோர் 150 ரன்கள் தாண்டும்படிப் பார்த்துக்கொண்டார். எனினும் 155/9 ரன்கள் கடைசி வரை மும்பைக்குப் போதுமானதாக இல்லை. நூர் 4 விக்கெட்டுகளும் கலீல் அஹமது 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
இந்தக் காலகட்டத்தில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றாலும் 2013-லிருந்து முதல் ஆட்டத்தில் மும்பை அணி தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டிருக்கிறது.