

சஞ்சு சாம்சனைக் கொடுக்க விரும்பும் ராஜஸ்தான் ராயல்ஸ், அவருக்குப் பதிலாக சிஎஸ்கேவிடமிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியின் மினி ஏலம் டிசம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கானப் பணிகளை அணிகள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. எந்த வீரரை விடுவிக்கலாம், ஏலத்தில் எந்த வீரரைக் குறிவைக்க வேண்டும் என்கிற வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில அணிகள் ஏலத்துக்கு முன்பே டிரேட் மூலம் வீரர்களைக் கொடுத்து வாங்க முயற்சித்து வருகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியிலிருந்து விலக முடிவு செய்துவிட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வு செய்ய முயற்சித்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து, சஞ்சு சாம்சனுக்காக ராஜஸ்தான் மற்றும் தில்லி கேபிடல்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகின.
சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக தில்லியிலிருந்து ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அறிமுகமாகாத ஒரு வீரரை ராஜஸ்தான் கேட்டதாகவும் இதன் காரணமாகவே இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் பிறகு கூறப்பட்டன.
ராஜஸ்தான் - தில்லி இடையிலான பேச்சுவார்த்தை முறிந்த பிறகு, சஞ்சு சாம்சனுக்காக மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சிஎஸ்கே நிர்வாகம். சஞ்சு சாம்சனைக் கொடுக்க ராஜஸ்தான் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டாலும், அவருக்குப் பதிலாகக் கேட்கும் வீரர்களில் தான் சிக்கல் இருக்கிறது. சிஎஸ்கேவிலிருந்து ரவீந்திர ஜடேஜாவைத் தேர்வு செய்வதில் ராஜஸ்தான் குறியாக இருக்கிறது. சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சிஎஸ்கேவிடமிருந்து ஜடேஜா மற்றும் வேறொரு வீரரையும் சேர்ந்து கேட்பதாக முதலில் சொல்லப்பட்டன.
தற்போதைய நிலையில், சஞ்சு சாம்சனுக்காக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை இழக்க சிஎஸ்கே நிர்வாகம் முன்வந்துள்ளதாகவும் இதுதொடர்பாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அண்மைத் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று வீரர்களிடமும் அணி நிர்வாகங்கள் இதுகுறித்து பேசியிருப்பதாகத் தெரிகிறது. எனினும், அணி நிர்வாகங்கள் சார்பில் அதிகாரபூர்வமாக எதுவுமே தெரிவிக்கப்படாமல் இருக்கிறது. ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தை இறுதியாகும்பட்சத்தில், மிக முக்கியமான ஒரு டிரேடாக இது பேசப்படும்.
இது நடக்கும் பட்சத்தில் எம்எஸ் தோனிக்கு அடுத்து சிஎஸ்கேவில் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக சஞ்சு சாம்சனின் வருகை இருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸுக்காக சஞ்சு சாம்சன் இதுவரை 11 ஐபிஎல் பருவங்களில் விளையாடியுள்ளார். ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸுக்காக 2012 முதல் எல்லா பருவங்களிலும் விளையாடியுள்ளார் (சிஎஸ்கே தடைசெய்யப்பட்ட 2016, 2017 தவிர்த்து).
ஐபிஎல் 2023 இறுதிச் சுற்றில் கடைசி இரு பந்துகளில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்து கோப்பையை வெல்ல உதவினார் ஜடேஜா. வெற்றிக்குப் பிறகு ஜடேஜாவை தோனி தூக்கியதெல்லாம் சிஎஸ்கே ரசிகர்களால் காலத்துக்கும் மறக்க முடியாத காட்சி.
அடுத்த சில நாள்களில் இந்தப் பேச்சுவார்த்தையின் நிலை குறித்து அதிகாரபூர்வமாக தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Reports suggest that Chennai Super Kings (CSK) and Rajasthan Royals (RR) are in early talks over a potential player swap involving Ravindra Jadeja, Sam Curran, and Sanju Samson ahead of the next IPL season.
Ravindra Jadeja | Sanju Samson | IPL | IPL 2026 | Rajasthan Royals | Chennai Super Kings | RR | CSK | Sam Curran | IPL Trade |