காமன்வெல்த் போட்டிகளிலிருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் நீக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியா ஆதிக்கம் செலுத்தக்கூடிய அதிக பதக்கங்களைக் குவிக்கக்கூடிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால்..
காமன்வெல்த் போட்டிகளிலிருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் நீக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி
1 min read

காமன்வெல்த் போட்டிகளிலிருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம், பாட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

23-வது காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. 2026 காமன்வெல்த் போட்டிகளை விக்டோரியா நடத்தவிருந்தது. நிதிச் சுமை காரணமாக இதை நடத்துவதிலிருந்து விக்டோரியா கடந்தாண்டு விலகியது. இதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டிகள் மீண்டும் கிளாஸ்கோவுக்குத் திரும்பியுள்ளது.

2026 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் இந்தப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

தடகளம் மற்றும் பாரா தடகளம், நீச்சல் மற்றும் பாரா நீச்சல் விளையாட்டுகள், கலைநயமிக்க ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிள் விளையாட்டு மற்றும் பாரா டிராக் சைக்கில் விளையாட்டு, நெட்பால், பளுதூக்குதல், குத்துச்சண்டை, பவர்லிஃப்டிங், ஜூடோ, பௌல்ஸ் மற்றும் பாரா பௌல்ஸ், 3-3 கூடைப்பந்து மற்றும் 3-3 சக்கரநாற்காலி கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

2022-ல் பிர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் 19 விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தன. 2026 காமன்வெல்த் போட்டிகளில் 10 விளையாட்டுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு விளையாட்டுகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. செலவைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கிரிக்கெட், ஹாக்கி, பாட்மிண்டன், மல்யுத்தம், ஸ்குவாஷ், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியா ஆதிக்கம் செலுத்தக்கூடிய அதிக பதக்கங்களைக் குவிக்கக்கூடிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். மல்யுத்தத்தில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா 114 பதக்கங்களை வென்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 135 பதக்கங்களை வென்றுள்து. ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி மூன்று வெள்ளிப் பதக்கங்களும் இரு வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி 2002-ல் தங்கம் வென்றது உள்பட மொத்தம் 3 முறை பதக்கங்களை வென்றுள்ளது. பாட்மிண்டனில் 10 தங்கம் உள்பட 31 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளின்போது நடைமுறைச் சிக்கல் காரணமாக துப்பாக்கிச் சூடு மட்டும் சேர்க்கப்படாமல் இருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in