7 வெற்றிகள் என்பது மகிழ்ச்சிதான்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்

"இரு முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களை இழந்தது, கான்வே இல்லாதது என மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல்போனது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது."
7 வெற்றிகள் என்பது மகிழ்ச்சிதான்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்
ANI

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையாதபோதிலும், 7 வெற்றிகளை அடைந்திருப்பது மகிழ்ச்சியைத் தருவதாக கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் தெரிவித்தார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்ட சிஎஸ்கே 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆர்சிபி நிர்ணயித்த 219 என்ற வெற்றி இலக்கை அடைய முடியாத போதிலும், 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றுவிடலாம் என்ற நிலைதான் சிஎஸ்கேவுக்கு இருந்தது. ஆனால், சிஎஸ்கேவால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்தத் தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் கூறியதாவது:

"உண்மையில், இது நல்ல ஆடுகளம் என்றே நினைக்கிறேன். பந்து திரும்பியது. ஆனால், இந்த மைதானத்தில் 200 ரன்கள் என்பது அடையக் கூடிய இலக்குதான். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். ஓரிரு ஷாட்கள்தான் வித்தியாசமாக அமைந்துள்ளது. ஆனால், டி20 ஆட்டத்தில் இது நடக்கதான் செய்யும். இலக்கைப் பொறுத்தவரை அடைய முடியாத அளவுக்கு அது பெரிய இலக்கு அல்ல என்பதில் மகிழ்ச்சிதான்.

இந்தப் பருவத்தில் அணியின் செயல்பாட்டை மதிப்பிடும்போது, 14 ஆட்டங்களில் 7 வெற்றி என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதுதான். கடைசி இரு பந்துகளில் இலக்கை அடைய முடியாமல் போனது. அணியில் வீரர்களுக்கு ஏற்பட்ட காயம், இரு முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களை இழந்தது, பேட்டிங் மேல் வரிசையில் கான்வே இல்லாதது என மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல்போனது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே நிர்வாகத்தைச் சேர்ந்த அனைவரும் மிகப் பெரிய பணியைச் செய்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன. முஸ்தபிஸுர் ரஹ்மானுக்குக் காயம் ஏற்பட்டது. பிறகு பதிரனாவுக்குக் காயம் ஏற்பட்டது. அவர் அணிக்குத் திரும்பினார். பிறகு மீண்டும் அணியைவிட்டுச் சென்றார். வீரர்களுக்குக் காயம் ஏற்படும்போது, ஒவ்வொரு ஆட்டத்திலும் அணியில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். ஆக, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியாதபோதிலும், 7 வெற்றிகள் மகிழ்ச்சியைத் தருகிறது.

கடந்தாண்டு இறுதி ஆட்டத்தில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்தோம். இன்றும் அதே சூழல்தான். ஆனால், இந்த முறை எங்களுக்குச் சாதகமானதாக ஆட்டம் அமையவில்லை.

என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட சாதனைகள் ஒரு பொருட்டே கிடையாது. வெற்றி பெற வேண்டும் என்பது தான் ஒரே இறுதி இலக்கு. வெற்றி இலக்கை அடைய முடியாதபோது அது ஏமாற்றமளிக்கும். 100 ரன்கள் அடித்திருந்தாலும் சரி 500, 600 ரன்கள் அடித்திருந்தாலும் சரி வெற்றி இலக்கை அடைய முடியாதபோது ஏமாற்றம்தான் மிஞ்சும். நான் மிகுந்த ஏமாற்றத்துடன்தான் உள்ளேன்" என்றார் ருதுராஜ் கெயிக்வாட்.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள ருதுராஜ் கெயிக்வாட் 583 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in