
கிரிக்கெட்டில் பந்து ஹெல்மட்டில் தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அனைத்து விதமாக கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக 27 வயது ஆஸ்திரேலிய வீரர் வில் புகோவ்ஸ்கி அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி. முதல் தர கிரிக்கெட்டில் 36 ஆட்டங்களில் 45.19 சராசரியில் 7 சதங்கள் உள்பட 2,350 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக ஒரேயொரு டெஸ்டில் விளையாடியுள்ளார். 2020/21-ல் இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் விளையாடிய புகோவ்ஸ்கி இரு இன்னிங்ஸிலும் 62 மற்றும் 10 ரன்கள் எடுத்தார்.
ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் விக்டோரியாவுக்காக விளையாடி வந்தார் புகோவ்ஸ்கி. கடந்தாண்டு மார்ச் மாதம்
டாஸ்மானியாவுக்கு எதிராக விளையாடியபோது, ரைலி மெரெடித் வீசிய பவுன்சர் பந்து புகோவ்ஸ்கி ஹெல்மட்டில் தாக்கியது. இதில் நிலைகுலைந்துபோன புகோவ்ஸ்கி ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
இதன்பிறகு, ஆஸ்திரேலியாவின் கோடைக் காலத்தில் நடைபெற்ற கிரிக்கெட்டில் அவர் பங்கெடுக்கவில்லை. கவுன்டி கிரிக்கெட்டில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தம் ஆகியிருந்தார். அதிலிருந்தும் விலகினார். மருத்துவக் குழுவினர் கடந்தாண்டே ஓய்வு பெறுமாறு புகோவ்ஸ்கியை வலியுறுத்தியுள்ளது. எனினும், இதுகுறித்து முடிவெடுக்காமல் இருந்தார் புகோவ்ஸ்கி.
இந்த பவுன்சர் பந்து தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளால் புகோவ்ஸ்கி பெரும் அவதிக்குள்ளானார். இதனால், தொடர்ந்து இன்னல்களைச் சந்தித்து வந்தார்.
இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக புகோவ்ஸ்கி இன்று அறிவித்தார். 27 வயதிலேயே எந்தவொரு நிலையிலும் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.