
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளரான கிறிஸ் சில்வர்வுட் அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 2022 முதல் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த கிறிஸ் சில்வர்வுட்டின் பதவிக்காலம் நடப்பு டி20 உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தனது ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்க விரும்பாத கிறிஸ் சில்வர்வுட் அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இவரது தலைமையில் இலங்கை அணி 2022 ஆசிய டி20 கோப்பையைக் கைப்பற்றியது. மேலும், 2023 ஆசிய கோப்பையில் 2-வது இடத்தைப் பிடித்தது.
அதேபோல 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் 9-வது இடம், நடப்பு டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேற்றம் என சமீப காலமாக இலங்கை அணியின் பயணம் சற்று கவலை அளிக்கும் வகையில் தான் இருந்தது.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதாலும் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கிறிஸ் சில்வர்வுட் விலகியுள்ளார்.