ரூ. 25 லட்சம்: ஆர்சிபி கொண்டாட்ட உயிரிழப்புகளுக்கு இழப்பீட்டை உயர்த்திய சித்தராமையா

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆர்சிபி அணி சார்பில் தலா ரூ. 10 லட்சம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தலா ரூ. 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 10 லட்சம் இழப்பீட்டை ரூ. 25 லட்சமாக உயர்த்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 அன்று வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். இவ்விவகாரம் நாடு முழுக்கப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு காவல் ஆணையர் தயானந்த் உள்பட 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். உளவுத் துறை ஏடிஜிபி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலர் கோவிந்தராஜ் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஆர்சிபியின் முக்கிய நிர்வாகி நிகில் சோசாலே உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த 11 பேர் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த ஜூன் 4 அன்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தற்போது இழப்பீட்டுத் தொகையை ரூ. 25 லட்சமாக உயர்த்தி முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆர்சிபி அணி சார்பில் தலா ரூ. 10 லட்சம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தலா ரூ. 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஏ. ஷங்கர் மற்றும் பொருளாளர் இ.எஸ். ஜெயராம் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in