சென்னைக்கு அடுத்ததாக ஹங்கேரியின் புதாபெஸ்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாடில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளன.
இந்திய ஆடவர் அணி கடைசிச் சுற்றில், 3.5-0.5 என ஸ்லோவேனியை வென்று முதல்முறையாக ஒலிம்பியாடில் தங்கம் வென்றது.
குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராதி, ஹரிகிருஷ்ணா, ஸ்ரீநாத் நாராயணன் (கேப்டன்) ஆகியோர் இந்திய ஆடவர் அணியில் இடம்பெற்றிருந்தார்கள்.
11-வது மற்றும் கடைசிச் சுற்றில் இந்திய மகளிர் அணி அஜர்பைஜானை 3.5-0.5 என வீழ்த்தி தங்கத்தை உறுதி செய்தது.
ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா, தானியா சச்தேவ், கேப்டன் அபிஜித் குண்டே ஆகியோர் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றிருந்தார்கள்.
தங்கம் வெல்வதற்குக் கடைசிச் சுற்றில் இந்திய ஆடவர் அணிக்கு டிராவும் இந்திய மகளிர் அணிக்கு வெற்றியும் தேவைப்பட்ட நிலையில் இரு அணிகளும் வெற்றிகளைப் பெற்று தங்கத்தை வென்றன.
மேலும் சென்னையில் ஒட்டுமொத்தமாக சிறந்த அணியாகத் தேர்வு பெற்ற இந்திய அணி இம்முறையும் அதே விருதை வென்றுள்ளது.
* இந்திய அணி முதல்முறையாக ஒலிம்பியாடில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 2014, 2022-ல் இந்திய ஆடவர் அணியும் 2022-ல் இந்திய மகளிர் அணியும் வெண்கலம் வென்றிருந்தன.
* ஒலிம்பியாடில் இதற்கு முன்பு, 2018-ல் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் சீன அணி தங்கம் வென்றது. இப்போது இந்தியா.
* இந்திய ஆடவர் அணி 21/22 என நம்பமுடியாத புள்ளிகளுடன் முதலிடம் பெற்று தங்கத்தை வென்றது. அமெரிக்காவுக்கு 2-வது இடமும் உஸ்பெகிஸ்தானுக்கு 3-வது இடமும் கிடைத்தன.
* இந்திய ஆடவர் அணி, உஸ்பெகிஸ்தானைத் தவிர இதர எல்லா அணிகளையும் வீழ்த்தியது. உஸ்பெகிஸ்தானை 2-2 என டிரா செய்தது.
* 11 சுற்றுகள் கொண்ட ஒலிம்பியாடில் முதல்முறையாக ஓர் அணி (இந்திய ஆடவர்) 21/22 எனப் புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவும் உக்ரைனும் 2016 ஒலிம்பியாடில் 20/22 புள்ளிகள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இனிமேல் இந்திய அணியின் சாதனையை வீழ்த்த 22/22 எனப் புள்ளிகள் பெற்றால் மட்டுமே சாத்தியமாகும்.
* ஓபன் பிரிவில் போர்ட் 1-ல் குகேஷும் போர்ட் 3-ல் அர்ஜுன் எரிகைசியும் மகளிர் பிரிவில் திவ்யாவும் வந்திகாவும் தங்கம் வென்றார்கள்.
*தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், விளையாடிய 10 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் கூட தோல்வியடையவில்லை. 8 வெற்றிகளும் 2 டிராக்களும் அவருக்குக் கிடைத்தன. குகேஷ், 10 ஆட்டங்களில் 9 புள்ளிகள் எடுத்தார். தற்போதைய தரவரிசைப் புள்ளி - 2794. உலகளவில் 5-வது இடம்.
* அர்ஜுன் எரிகைசியும் இப்போட்டியில் அசத்தியுள்ளார். 10/11 என இப்போட்டியை முடித்துள்ளார். 2797 புள்ளிகளுடன் சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
* இந்திய மகளிர் அணி மொத்தமாக 19/22 என அட்டகாசமாக விளையாடி தங்கம் வென்றது. 2-வது இடம் கஸகஸ்தானுக்கும் 3-வது இடம் அமெரிக்காவுக்கும் கிடைத்தன.