வரலாறு படைத்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ்: கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்!

உலக சாம்பியனுக்கானப் போட்டியில் டிங் லிரனுடன் மோதவுள்ளார்.
வரலாறு படைத்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ்: கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயது குகேஷ், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியை இளம் வயதில் வென்று சாதனை படைத்துள்ளார்.

அடுத்ததாக உலக செஸ் சாம்பியனுக்கான போட்டியில் டிங் லிரனுடன் மோதவுள்ளார்.

நடப்பு உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை முடிவு செய்வதற்கான 2024 ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி ஏப்ரல் 3 முதல் கனடாவில் நடைபெற்று வந்தது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் நேற்று 13-வது சுற்றில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றிருந்தார்.

14-வது சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவை குகேஷ் எதிர்கொண்டார். இந்த ஆட்டம் குகேஷுக்குச் சாதகமாக டிராவில் முடிந்தது. இதனால் 0.5 புள்ளி பெற்று 9 புள்ளிகளுடன் மீண்டும் முன்னிலை பெற்றார் குகேஷ். இதையடுத்து கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியை வென்று சாதனை படைத்தார் குகேஷ்.

ரஷியாவின் நெபோ மற்றும் அமெரிக்காவின் ஃபேபியானோ கருணா இடையிலான ஆட்டமும் குகேஷுக்குச் சாதகமாக டிராவில் முடிந்தது. இந்தச் சுற்று தொடங்குவதற்கு முன்பு குகேஷ் 8.5 புள்ளிகளைப் பெற்றிருந்தார். நெபோ மற்றும் கருணா ஆகியோர் தலா 8 புள்ளிகளில் இருந்தார்கள். கடைசிச் சுற்றில் இவர்களில் யாராவது ஒருவர் வெற்றி பெற்றிருந்தாலும், இதன் வெற்றியாளருடன் டை பிரேக்கரில் மோத வேண்டிய சூழல் குகேஷுக்கு ஏற்பட்டிருக்கும்.

இப்போட்டியில் 5 வெற்றிகள், 8 டிராக்கள் மற்றும் ஒரேயொரு தோல்வியை மட்டுமே சந்தித்த குகேஷ் 9 புள்ளிகளைப் பெற்று ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியின் வெற்றியாளரானார். இதன்மூலம், குறைந்த வயதில் (17) கேண்டிடேட்ஸ் போட்டியை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். 2014-ல் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு கேண்டிடேட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் குகேஷ் தான்.

இவருடைய வெற்றிக்கு விஸ்வநாதன் ஆனந்த் எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்ததாக உலக செஸ் சாம்பியனுக்கான போட்டியில் நடப்பு உலக சாம்பியன் டிங் லிரனை எதிர்த்து குகேஷ் விளையாடவுள்ளார். இறுதிச் சுற்றில் உலக சாம்பியனுடன் மோதும் போட்டியாளர்களிலும் இள வயது வீரர் குகேஷ் தான். இதனால் பல பெருமைகளுடன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் நுழையவுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in