கூடுதல் எடையால் நீக்கம்: பிரித்வி ஷாவுக்கு கிரேக் சேப்பல் கடிதம்!

இந்திய அணியின் கதவு எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும்.
கூடுதல் எடையால் நீக்கம்: பிரித்வி ஷாவுக்கு கிரேக் சேப்பல் கடிதம்!
ANI
1 min read

கூடுதல் எடை, உடற்தகுதியின்மை போன்ற காரணங்களால் மும்பை ரஞ்சி கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட பிரித்வி ஷாவுக்கு கிரேக் சேப்பல் கடிதம் எழுதியுள்ளார்.

24 வயதான பிரித்வி ஷா, ஜூலை 2021-க்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடவில்லை. இந்நிலையில் கூடுதல் எடை, உடற்தகுதியின்மை, பொறுப்பில்லாமல் செயல்பட்டதன் காரணமாக மும்பை ரஞ்சி கோப்பை அணியிலிருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பிரித்வி ஷாவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டவருமான கிரேக் சேப்பல் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

“இது போன்ற சூழல் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வரும். டான் பிராட்மேன் போன்ற ஜாம்பான்களும் அணியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் தங்களை நிரூபித்தனர். இதுபோன்ற சூழலில் அவர்கள் சவால்களை எப்படி எதிகொண்டனர் என்பதே அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றியது.

மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டது உங்களுக்கு எவ்வளவு வலியை கொடுத்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. இது இயற்கையான ஒன்று. ஆனால், இதுபோன்ற சூழல்களே பலரது வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்திய யு-19 அணியில் நீங்கள் விளையாடியதைக் கண்டு வியந்தேன். உங்களின் திறமையைக் கண்ட பலரும், உங்களின் சிறப்பான ஆட்டத்தை மீண்டும் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறோம். சூழ்நிலை மீது காரணம் சொல்லாமல், அதிலிருந்து மீண்டு வர வேண்டும். நடந்ததை பற்றி சிந்திக்காமல், நீங்கள் எப்படிப்பட்ட வீரராகவும் மனிதராகவும் மாற வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

உங்களின் உடல் மீது கவனம் செலுத்துங்கள். இந்திய அணியின் கதவு எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும். மீண்டும் அணியில் இடம்பெறுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டாலோ அல்லது என்னிடம் ஏதும் கேட்க நினைத்தாலோ தயங்காமல் என்னிடம் பேசுங்கள்”.

இவ்வாறு கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in