
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகியுள்ளார்.
சந்திரகாந்த் பண்டிட் புதிய வாய்ப்புகளைக் கண்டறிய முடிவு செய்துள்ளதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் அவர் இனி தொடர மாட்டார் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2022-ல் ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டிட், 2022 ஆகஸ்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். இவருக்கு முன்பு பிரெண்டன் மெக்கல்லம் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.
சந்திரகாந்த் பண்டிட் பொறுப்பேற்ற முதல் ஆண்டில் (ஐபிஎல் 2023) கேகேஆர் பெரியளவில் சோபிக்காமல் 7-வது இடத்தையே பிடித்தது. இதற்கிடையில், சந்திரகாந்த் பண்டிட்டின் அணுகுமுறை சற்று கடுமையானதாக இருப்பதாக மூத்த வீரர்கள் சிலர் உணர்கிறார்கள் என்ற புகார்களும் எழுந்தன. இதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2024-க்கு முன்பு அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
ஐபிஎல் 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஐபிஎல் 2025-க்கு முன்பு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அபிஷேக் நாயரும் இந்திய அணியுடன் இணைந்தார்.
இதன் காரணமாக, ஐபிஎல் 2025-ல் சந்திரகாந்த் பண்டிட் கேகேஆர் அணியை முன்னின்று வழிநடத்தி வந்தார். 2025-ல் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தையே பிடித்தது கேகேஆர்.
இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழுவிலிருந்து நீக்கப்பட்ட அபிஷேக் நாயர் மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு மத்தியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்தார். இவருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேக் நாயர் கடந்த 2018 முதல் 2024 வரை கேகேஆர் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்தார்.
Kolkata Knight Riders | KKR | Chandrakant Pandit | IPL | Indian Premier League