
2025-ல் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில், இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறாது என ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி வரும் 2025 பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இப்போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என ஐசிசியிடம் பிசிசிஐ தெரிவித்தது. பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்தால் நாங்களும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் கிடுக்குப்பிடி போட்டது. இதனால் தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் விளையாட இதுவரை மறுப்பு தெரிவித்து வருகிறது பிசிசிஐ. அதேநேரம், கடந்த 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றது பாகிஸ்தான்.
இந்நிலையில் பாகிஸ்தானின் வேண்டுகோளையும் ஏற்று இப்பிரச்னையை முடித்துவைத்துள்ளது ஐசிசி.
அதன்படி, 2024-2027 காலக்கட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானும் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி போட்டிகளில் இந்தியாவும் அவரவர் ஆட்டங்களை பொது மைதானத்தில் விளையாடிக் கொள்ளலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.
இதையடுத்து 2025 சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலோ இலங்கையிலோ நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.