பழிதீர்க்கப்பட்டது: சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா!

ஐசிசி நடத்தும் போட்டிகளின் அனைத்து இறுதிச் சுற்றுகளுக்கும் தகுதி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
பழிதீர்க்கப்பட்டது: சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா!
ANI
3 min read

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா.

சாம்பியன்ஸ் கோப்பை முதல் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து 14-வது முறையாக டாஸில் தோற்றது.

ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக ஏற்கெனவே விலகினார். இவருக்குப் பதில் கூப்பர் கான்லி சேர்க்கப்பட்டார். மேலும், வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்செர் ஜான்சனுக்குப் பதில் தன்வீர் சங்கா சேர்க்கப்பட்டார். இருவருமே பந்தை சுழற்றக்கூடியவர்கள். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. வருண் சக்ரவர்த்தி உள்பட நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.

ஆஸ்திரேலியாவில் டிராவிஸ் ஹெட் உடன் கூப்பர் கான்லி தொடக்க பேட்டராக களமிறங்கினார். முஹமது ஷமி வீசிய இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்திருக்கக்கூடும். ஆனால், முஹமது ஷமியே இந்த கேட்சை தவறவிட்டார்.

முதல் மூன்று ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். கூப்பர் கான்லி பந்தைத் தொட தடுமாறிக் கொண்டிருந்தார். விளைவாக ஷமி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வந்தவுடன், டிராவிஸ் ஹெட் அதிரடிக்கு மாறினார். ஹார்திக் பாண்டியா ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர், ஷமி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி என ஹெட் கலக்கினார். குல்தீப் யாதவ் அழைத்து வரப்பட்டார். இவரது பந்தும் சிக்ஸருக்கு பறந்தது.

இதனால், வருண் சக்ரவர்த்தி 9-வது ஓவரில் அழைக்கப்பட்டார். இவரை எதிர்கொண்ட முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். இவர் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்குப் பெருமூச்சு வந்தது. எனினும், 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 63 ரன்கள் எடுத்தது.

அடுத்த 10 ஓவர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேன் சிறப்பாகக் கூட்டணி அமைத்தார்கள். சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட்டை இழக்காமல் பார்த்துக் கொண்டார்கள். 20 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

ஸ்மித் - லபுஷேன் இணை 56 ரன்கள் சேர்த்த நிலையில், ஜடேஜா சுழலில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் லபுஷேன். ஸ்மித் 68 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வார் என்று பெயர் எடுத்த ஜோஷ் இங்லிஸும் 11 ரன்களுக்கு ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தார். 144 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.

இடக்கை பேட்டர் என்ற அனுகூலத்தைப் பயன்படுத்தி, இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் அலெக்ஸ் கேரி. 30 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் படிப்படியாக உயரத் தொடங்கியது.

தவறான நேரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அக்‌ஷர் படேல் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் அடித்த மேக்ஸ்வெல் அடுத்த பந்திலேயே போல்டானார். 40 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

கடைசி வரை விளையாட வேண்டிய பொறுப்புடன் களத்திலிருந்த அலெக்ஸ் கேரி 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். 19 ரன்கள் எடுத்த பென் ட்வார்ஷிஸ் வருண் சக்ரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி ஸ்டிரைக்குக்கு வர முயன்று இரண்டு ரன்களுக்கு ஓடியபோது, ஷ்ரேயஸ் ஐயரின் அட்டகாசமான த்ரோவால் ரன் அவுட் ஆனார். இவர் 61 ரன்கள் எடுத்தார். 270 ரன்களுக்கு மேல் ஆஸ்திரேலியா எடுத்துவிடும் என்று எதிர்பார்த்தபோது, கேரி ஆட்டமிழந்ததால் 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.

இந்திய அணியில் முஹமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அக்‌ஷர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

265 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோஹித் சர்மா தனது பாணியில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஆதிக்கம் செலுத்த முயற்சித்தார். இந்த முயற்சியில் இரு முறை ஆட்டமிழந்திருக்கக்கூடும். ஆனால், ஆஸ்திரேலிய அணி இரு கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டு ரோஹித்துக்கு உதவியது.

ஷுப்மன் கில் 8 ரன்கள் எடுத்திருந்தபோது பென் ட்வார்ஷிஸ் பந்தில் போல்டானார். 8-வது ஓவரில் கூப்பர் கான்லியை அழைத்தார் ஸ்டீவ் ஸ்மித். இவரது பந்தை ஸ்வீப் செய்ய முயன்று ரோஹித் சர்மா 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் இந்தியா 55 ரன்கள் எடுத்தது.

இரு தொடக்க பேட்டர்கள் ஆட்டமிழந்ததால், இலக்கை விரட்டுவதில் சற்று பதற்றம் அதிகரித்தது. எனினும் விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் மிகப் பொறுப்புடன் விளையாடி கூட்டணியைக் கட்டமைத்தார்கள். ரன்கள் ஓடி இன்னிங்ஸை கட்டமைக்க, பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்கள். ஓடியே பெரும்பான்மையான ரன்களை எடுத்ததால், ஓவருக்கு 5 ரன்கள் என பெரிய மெனக்கெடல் இல்லாமல் ரன்கள் உயர்ந்தன. 20 ஓவரில் இந்தியா 103 ரன்கள் எடுத்தது.

கூட்டணியாக இருவரும் 50 ரன்களை கடக்க, விராட் கோலி 53 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய நேரத்தில் ஷ்ரேயஸ் ஐயர் 45 ரன்களுக்கு ஆடம் ஸாம்பா சுழலில் போல்டானார். கோலி - ஷ்ரேயஸ் இணை 91 ரன்கள் எடுத்தது.

அடுத்து வந்த அக்‌ஷர் படேல், கோலிக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடாது என வேகமாக விளையாடினார். ஆஸ்திரேலியா அழுத்தத்துக்கு உள்ளானது. இந்தியாவின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 6-ஐ தொடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து அற்புதமாக விளையாடினார்கள். 35-வது ஓவரில் நேதன் எல்லிஸ் பந்துவீச வந்தார். இவரது பந்தை மடக்கி அடிக்கப் பார்த்து அக்‌ஷர் படேல் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அக்‌ஷர் படேல் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 87 ரன்கள் தேவைப்பட்டன. விக்கெட் விழுந்ததால் அடுத்த 5 ஓவர்களில் பவுண்டரியும் இல்லை. ஆட்டத்தில் சற்று விறுவிறுப்பு அதிகரித்தது, ஆஸ்திரேலியாவின் கை ஓங்கத் தொடங்கியது. 40 ஓவர்களில் இந்தியா 200 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் 65 ரன்கள் தேவைப்பட்டன.

இந்நிலையில், ஆட்டத்தின் போக்கை மாற்றத் தொடங்கினார் கேஎல் ராகுல். தன்வீர் சங்கா ஓவரில் பவுண்டரி, ட்வார்ஷிஸ் ஓவரில் பவுண்டரி, ஆடம் ஸாம்பா ஓவரில் சிக்ஸர் என அடுத்தடுத்த ஓவர்களில் ஆக்ரோஷமாக விளையாடினார் ராகுல். ராகுலுக்கு ஒத்துழைக்க வேண்டிய இந்த மகத்தான நேரத்தில் ராகுல் சிக்ஸர் அடித்த ஸாம்பா ஓவரிலேயே, தூக்கி அடிக்கப் பார்த்து மிகத் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார் கோலி. இவர் 84 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய ஹார்திக் பாண்டியா நிறைய டாட் பந்துகளை விளையாட 32 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. தன்வீர் சங்கா சுழலில் 106 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் அடித்து நெருக்கடியைத் தணித்தார். எனினும், நேதன் எல்லிஸ் வீசிய அடுத்த ஓவரில் வெறும் 1 ரன் தான். 24 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்டபோது, ஸாம்பாவைப் பந்துவீசச் சொன்னார் ஸ்மித். முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட, கடைசி இரு பந்துகளில் இரு பெரிய சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தை இந்தியா பக்கத்துக்குத் திருப்பி உறுதி செய்தார் ஹார்திக் பாண்டியா.

எல்லிஸ் வீசிய அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தாலும், அதே ஓவரில் ஆட்டமிழந்தார் பாண்டியா. இவர் 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் அழுத்தம் இல்லாமல் விளையாடி வந்த ராகுல், மேக்ஸ்வெல் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். 48.1 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேஎல் ராகுல் ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

2023 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததற்கு துபாயில் பழி தீர்த்தது இந்தியா. இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றதால், இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணி துபாய் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றுகளுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம், ஐசிசி நடத்தும் போட்டிகளின் அனைத்து இறுதிச் சுற்றுகளுக்கும் தகுதி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in