தொடங்கியது சாம்பியன்ஸ் கோப்பை!

8 வருட காத்திருப்புக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பை...
தொடங்கியது சாம்பியன்ஸ் கோப்பை!
1 min read

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் தொடங்கியுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி 1998-ல் முதன்முறையாக நடைபெற்றது. தொடங்கப்பட்ட காலத்தில் ஐசிசி நாக்அவுட் என்று அழைக்கப்பட்டது. 2000-வது ஆண்டில் கென்யாவில் நடைபெற்றது. 2002-ல் சாம்பியன்ஸ் கோப்பை எனப் பெயர் மாற்றப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சாம்பியன்ஸ் கோப்பை நடைபெற்று வந்தது.

2009-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிறகு, சாம்பியன்ஸ் கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பங்கெடுக்கும்.

கடைசியாக 2017-ல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதிச் சுற்றில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 2017 சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி ரத்து செய்யப்படுவதாக ஐசிசி முடிவு செய்தது. ஒரு வடிவிலான கிரிக்கெட்டுக்கு (டெஸ்ட், ஒருநாள், டி20) ஒரு பெரிய தொடரை மட்டுமே நடத்த முடியும் என ஐசிசி தீர்மானித்தது.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படும் வகையில் முடிவு செய்யப்பட்டது. எனினும், இந்த முடிவைத் திரும்பப் பெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியை மீண்டும் அறிமுகம் செய்தது. 2025 சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பாகிஸ்தானிலும் 2029 சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி இந்தியாவிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் நடப்பு சாம்பியன் என்கிற அந்தஸ்துடன் பாகிஸ்தான் விளையாடுகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

சுமார் 8 வருடக் காத்திருப்புக்குப் பிறகு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்பியன்ஸ் கோப்பை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முஹமது ரிஸ்வான் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். முதல் பந்தை நியூசிலாந்து பேட்டர் வில் யங் எதிர்கொள்ள, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி பந்தை வீசியிருக்கிறார்.

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணிகள்

  • 1998/99 - தென்னாப்பிரிக்கா

  • 2000/01 - நியூசிலாந்து

  • 2002/03 - இந்தியா - இலங்கை பகிர்வு

  • 2004 - மேற்கிந்தியத் தீவுகள்

  • 2006/07 - ஆஸ்திரேலியா

  • 2009/10 - ஆஸ்திரேலியா

  • 2013 - இந்தியா

  • 2017 - பாகிஸ்தான்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in