
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பி பிரிவிலிருந்து அரையிறுதிக்குள் நுழையப்போவது யார் என்ற கேள்வி சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஏ பிரிவில் முதலிரு ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டன. இரு அணிகளிடமும் தோல்வியடைந்த பாகிஸ்தான், வங்கதேசம் போட்டியிலிருந்து வெளியேறின. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன.
பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தையும் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தின. இவ்விரு அணிகளும் மோதவிருந்த ஆட்டம் மழையால் டாஸ் போடாத நிலையில் கைவிடப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
இதன் காரணமாக, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் தோல்வியடையும் அணி போட்டியிலிருந்து வெளியேறும் நிலை உருவானது. இதன்படி, புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்தைப் போட்டியிலிருந்து வெளியேற்றியது. தற்போது பி பிரிவிலிருந்து அரையிறுதிக்குள் நுழையப்போகும் அணி எது என்ற கேள்வி போட்டியை சுவாரஸ்யப்படுத்தியுள்ளது.
பி பிரிவில் இன்னும் இரு ஆட்டங்கள் மீதமுள்ளன. ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் வெள்ளிக்கிழமையும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமையும் மோதுகின்றன. இந்த இரு ஆட்டங்களைப் பொறுத்து இரு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறவுள்ளன.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா வெற்றி
பி பிரிவில் மீதமுள்ள இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் வெற்றி பெற்றால், இரு அணிகளும் தலா 5 புள்ளிகளை அடைந்து அரையிறுதிக்குள் நுழையும். வெற்றியின் அளவைப் பொறுத்து புள்ளிகள் பட்டியலில் நெட் ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடிக்கப்போவது யார் என்பது தீர்மானிக்கப்படும்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வெற்றி
மீதமுள்ள இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா 5 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். தென்னாப்பிரிக்கா 3 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்துவிடும்.
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 5 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவைத் (3 புள்ளிகள்) தோற்கடித்தால் 4 புள்ளிகளுடன் இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழையும்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து வெற்றி
ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி அரையிறுதிக்குள் நுழையும். இரண்டாவது அணியாக தலா 3 புள்ளிகளுடன் இருக்கும் ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். இது நெட் ரன்ரேட்டை சார்ந்து தீர்மானிக்கப்படும்.
தற்போதைய நிலையில் தென்னாப்பிரிக்க வசம் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் கூடுதல் நெட் ரன்ரேட் உள்ளது. இது தென்னாப்பிரிக்காவுக்குக் கூடுதல் பலம். இதைக் கடந்து ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைய வேண்டுமெனில், தென்னாப்பிரிக்கா மிகப் பெரிய வித்தியாசத்தில் படுதோல்வியடைய வேண்டும், ஆஸ்திரேலியா மிகக் குறைவான வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும். இதன்மூலம், தென்னாப்பிரிக்காவின் நெட் ரன்ரேட் ஆஸ்திரேலியாவைவிட சரிவைக் காணும். அப்போது தான் ஆஸ்திரேலியாவால் இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைய முடியும்.
ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் ஆட்டம் கைவிடப்பட்டால்
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இடையே லாகூரில் நடைபெறும் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். இதன்மூலம், 4 புள்ளிகளை அடையும் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யும்.
இதன்பிறகு, இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆட்டம் நடைபெறும். இதில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், 5 புள்ளிகளை அடைந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி அரையிறுதிக்குள் நுழையும். இங்கிலாந்து வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் தலா 3 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நெட் ரன்ரேட் அடிப்படையில் முடிவு செய்யப்படும். ஆப்கானிஸ்தான் நெட் ரன்ரேட் (-0.99) எதிர்மறையில் இருப்பதால், அந்த அணி வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகம். அதையும் மீறி ஆப்கானிஸ்தான் நுழைய வேண்டுமெனில் மிகப் பெரிய வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வியடைய வேண்டும்.