வினேஷ் போகாட்டின் பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் குழு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறி சாதனை படைத்த இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் இன்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் கூடுதல் எடையில் இருந்ததால் வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இறுதிச் சுற்று வரை முன்னேறியதால் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்த நிலையில், தற்போது எந்தப் பதக்கமும் இல்லாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சஞ்சய் சிங், வினேஷ் போகாட்டின் பயிற்சியாளர்கள் குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
"இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் உலக மல்யுத்த கூட்டமைப்பிடம் உரையாடினேன். தளர்வுகள் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
இந்த இடத்தில் வினேஷ் போகாட் மீது எந்தத் தவறும் இல்லை. அவர் சிறப்பாக விளையாடி வந்தார். அவருடையப் பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் குழுதான் இதற்கு முழுப் பொறுப்பு. வினேஷ் போகாட்டின் எடை எப்படி கூடியது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் குழு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்றார் அவர்.