
நியூயார்கில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இயன் நெபோ ஆகிய இருவரும் பகிர்ந்துகொண்டார்கள்.
இப்போட்டியின் வரலாற்றில் சாம்பியன்ஷிப் பட்டத்தை இருவர் பகிர்ந்துகொள்வது இதுவே முதன்முறை.
உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் நார்வேயைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், ரஷியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இயன் நெபோ மோதினார்கள். மேக்னஸ் கார்ல்சன் முதலிரு சுற்றுகளில் வெற்றி பெற்றார். இதனால், உலக பிளிட்ஸ் சாம்பியன் பட்டத்தை வெல்ல அடுத்து வரும் சுற்றுகளில் ஒரு டிரா செய்தாலே போதும் என்ற நிலை உருவானது.
ஆனால், நெபோ எழுச்சியுடன் விளையாடி அடுத்த இரு சுற்றுகளிலும் வெற்றி பெற்றார்.
இதன் பிறகு வெற்றியாளரைத் தீர்மானிக்க, டை பிரேக்கர் நடைபெற்றது. எனினும், அடுத்து நடைபெற்ற மூன்று ஆட்டங்களிலும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, சாம்பியன் பட்டத்தைப் பகிர்ந்துகொள்ளலாமா என மேக்னஸ் கார்ல்சன், நெபோவிடம் கேட்டார்.
இதற்கு நெபோ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் உடனடியாக ஒப்புக்கொண்டார். ஃபிடேவும் இதற்கு ஒப்புக்கொண்டது. இதன்மூலம், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இருவரும் பகிர்ந்துகொண்டார்கள். இந்தப் பட்டத்தை கார்ல்சன் வெல்வது இது 8-வது முறை. நெபோ முதல்முறையாக வென்றுள்ளார்.
மேக்னஸ் கார்ல்சன் இதுகுறித்து கூறியதாவது:
"நாங்கள் இருவரும் சோர்வாகி பதற்றமடைந்துவிட்டோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். சிலருக்கு இது பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.
நாங்கள் ஏற்கெனவே நிறைய நேரம் விளையாடி விட்டோம். இதை முடிவுக்குக் கொண்டு வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒரு கட்டத்தில் ஒரு வெற்றியாளராகவும் மற்றொருவர் இரண்டாவது இடத்தையும் பிடிக்க நேரிட்டால் அது கொடுமையானதாக மாறிவிடும் என்பதை உணர்ந்தேன். அதனால் தான் இது நியாயமான தீர்வாக இருக்கும் என நினைத்தேன்" என்றார்.