அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கர்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இறுதிச் சுற்றில் இத்தாலியின் யானிக் சின்னரை 6-2, 3-6, 6-1, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கர்லோஸ் அல்கராஸ், யானிக் சின்னர் ஞாயிற்றுக்கிழமை மோதினார்கள். யானிக் சின்னர் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கினார்.
பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் இறுதிச் சுற்றுகளிலும் அல்கராஸ் மற்றும் சின்னர் தான் மோதினார்கள். தொடர்ந்து மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றிலும் இவர்கள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதிச் சுற்றை நேரில் கண்டு களித்தார். இவர் பங்கேற்றதால் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆட்டம் 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது.
முதல் செட்டில் அல்கராஸ் ஆதிக்கம் செலுத்தினார். இரண்டாவது செட்டில் சின்னர் எழுச்சி பெற்றாலும், அடுத்தடுத்த செட்களில் அல்கராஸே மிரட்டினார். இறுதியில் 6-2,3-6, 6-1, 6-4 என்கிற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றார்.
அல்கராஸுக்கு இது 6-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன்மூலம், சின்னரிடமிருந்து நெ. 1 இடத்தைப் பறித்த அல்கராஸ், செப்டம்பர் 2023-க்குப் பிறகு மீண்டும் நெ. 1 இடத்தை அடைகிறார்.
இந்தத் தோல்வியின் மூலம் அமெரிக்க ஓபனில் தொடர்ச்சியாக 27 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த சின்னரின் ஓட்டம் முடிவுக்கு வந்தது. அமெரிக்க ஓபனில் 2004 முதல் 2008 வரை தொடர்ச்சியாக 5 முறை பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். இதன்பிறகு, எந்தவொரு வீரராலும் அமெரிக்க ஓபன் பட்டத்தைத் தொடர்ச்சியாக இருமுறை வெல்ல முடியவில்லை. சின்னராலும் நடப்பு சாம்பியன் அந்தஸ்தைத் தக்கவைக்க முடியவில்லை.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் சின்னரை வீழ்த்தி சாம்பியன் ஆனார் அல்கராஸ். ஜூலையில் நடைபெற்ற விம்பிள்டன் இறுதிச் சுற்றில் அல்கராஸை வீழ்த்தி சாம்பியன் ஆனார் சின்னர். தற்போது அமெரிக்க ஓபனில் சின்னரை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளார் அல்கராஸ்.
US Open | Jannik Sinner | Carlos Alcaraz | US Open Final | Grandslam