பிரித்வி ஷா என்ன செய்ய வேண்டும்?: ஷ்ரேயஸ் ஐயர் பதில்

"எவர் ஒருவரையும் குழந்தையைப் போல பார்த்துக்கொள்ள முடியாது..."
பிரித்வி ஷா என்ன செய்ய வேண்டும்?: ஷ்ரேயஸ் ஐயர் பதில்
ANI
1 min read

பிரித்வி ஷாவிடம் உள்ள திறமைகள் வேறு யாரிடமும் கிடையாது என ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

அடுத்த சச்சின் டெண்டுல்கர் என மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட பிரித்வி ஷா 2018-ல் இந்திய அணிக்காக அறிமுகமானார். 19 வயதைப் பூர்த்தி செய்வதற்கு முன்பே அறிமுக டெஸ்டில் சதமடித்தார். எனினும், கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 11 சர்வதேச ஆட்டங்களில் மட்டுமே பிரித்வி ஷா விளையாடியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியாலும் பிரித்வி ஷா தக்கவைக்கப்படவில்லை. ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை. உடற்தகுதி காரணமாக ரஞ்சிக் கோப்பை முதல் பகுதியில் மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் மும்பை அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அந்த அணி கோப்பை வெல்ல இவர் ஆற்றிய பங்களிப்பு ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. இந்தப் போட்டியில் மும்பைக்காக 9 ஆட்டங்களிலும் விளையாடிய பிரித்வி ஷா 156.34 ஸ்டிரைக் ரேட்டில் வெறும் 197 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலும் ஜொலிக்காத நிலையில், பிரித்வி ஷா மீது மீண்டும் வெளிச்சம் பாய்ந்துள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற மும்பை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பிரித்வி ஷா குறித்து பேசுகையில், எவர் ஒருவரையும் குழந்தையைப் போல பார்த்துக்கொள்ள முடியாது, அல்லவா? என்றார்.

பிரித்வி ஷா கடவுளின் ஆசி பெற்றவர். அவரிடம் உள்ள திறமைகள், வேறு யாரிடமும் கிடையாது. கிரிக்கெட்டுக்கான ஒழுக்கத்தை மட்டும் அவர் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். யாரையும் குழந்தையைப் போல பக்குவப்படுத்த முடியாது, அல்லவா?

அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அனைவரும் அவருக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளோம். அவருக்கான வழியை அவர்தான் கண்டறிய வேண்டும். கடந்த காலங்களிலும் அவர் அதைச் செய்திருக்கிறார். அவருக்கு இது புதிதொன்றும் அல்ல" என்றார் ஷ்ரேயஸ் ஐயர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in