கேண்டிடேட்ஸ் செஸ்: முதலிடம் பெற்று சாதனை படைப்பாரா இந்தியாவின் குகேஷ்?

பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் முறையே 6 மற்றும் 5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5 மற்றும் 6-வது இடத்தில் உள்ளனர்.
குகேஷ்
குகேஷ்@FIDE_chess

கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 12-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

கனடாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 8 பேர் என மொத்தம் 16 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இப்போட்டி ஏப்ரல் 3 அன்று தொடங்கியது. இந்தியாவிலிருந்து ஆண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா, டி. குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் பெண்கள் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி என 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

நடப்பு உலக சாம்பியனுடன் மோதும் வீரர் மற்றும் வீராங்கனையை முடிவு செய்யும் இப்போட்டி ஏப்ரல் 23 வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் 12 சுற்றுகள் முடிவடைந்தன. 12-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஆண்கள் பிரிவில் டி.குகேஷ் 7.5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். ஆனால் முதல் இரு இடங்களில் உள்ள வீரர்களும் 7.5 புள்ளிகளுடன் இருப்பதால், மூவரும் சமநிலையில் உள்ளனர்.

பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் முறையே 6 மற்றும் 5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5 மற்றும் 6-வது இடத்தில் உள்ளனர்.

ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். மொத்தம் 14 சுற்றுகள் நடைபெறும். இப்போட்டியின் முடிவில் முதலிடம் பிடிப்பவர்கள் 2024-ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவார்கள்.

இந்நிலையில் 12 சுற்றுகள் முடிந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த டி.குகேஷ் நல்ல நிலைமையில் உள்ளார். அவர் முதலிடம் பெற்று சாதனை படைப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in