கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

இதில் 5 இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்
கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்@FIDE

கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் இன்று தொடங்குகிறது.

நடப்பு உலக சாம்பியனுடன் மோதும் வீரர் மற்றும் வீராங்கனையை முடிவு செய்யும் இப்போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் இன்று தொடங்கி ஏப்ரல் 23 வரை நடைபெறுகிறது.

இப்போட்டிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 8 பேர் என மொத்தம் 16 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி ஒரே நேரத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

ஆண்கள் பிரிவில் 5 முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சென் இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றும், போட்டியிலிருந்து விலகினார். 2022-ல் உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு அதைத் தக்கவைக்க கார்ல்சன் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. கிளாசிகல் செஸ் போட்டியில் விளையாட அவர் ஆர்வம் காண்பிக்காததே முக்கியக் காரணமாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா, டி.குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் பெண்கள் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி என 5 பேர் விளையாட உள்ளனர்.

ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். மொத்தம் 14 சுற்றுகள் நடைபெறும். இப்போட்டியின் முடிவில் முதலிடம் பிடிப்பவர்கள் 2024-ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவார்கள்.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறுபவர் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.

அதேபோல் பெண்கள் பிரிவில் வெல்லும் வீராங்கனை நடப்பு உலக சாம்பியனான சீனாவின் ஜூ வென்ஜுனுடன் மோதும் வாய்ப்பைப் பெறுவார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in