கேண்டிடேட்ஸ் செஸ்: 13-வது சுற்றில் வெற்றி பெற்று குகேஷ் முன்னிலை!

14-வது சுற்றிலும் அவர் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டம் வென்று, உலக சாம்பியன் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவார்.
குகேஷ்
குகேஷ்@FIDE_chess

கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 13-வது சுற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

கனடாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 8 பேர் என மொத்தம் 16 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இப்போட்டி ஏப்ரல் 3 அன்று தொடங்கியது. இந்தியாவிலிருந்து ஆண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் பெண்கள் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி என 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

நடப்பு உலக சாம்பியனுடன் மோதும் வீரர் மற்றும் வீராங்கனையை முடிவு செய்யும் இப்போட்டி ஏப்ரல் 23 வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் 13 சுற்றுகள் முடிவடைந்தன. 13-வது சுற்றில் அலிரேஸா ஃபிரோஸியாவை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஆண்கள் பிரிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

14-வது சுற்றில் நாகமுராவையும் வீழ்த்தினால், சாம்பியன் பட்டம் வென்று, உலக சாம்பியன் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவார்.

ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். மொத்தம் 14 சுற்றுகள் நடைபெறும். இப்போட்டியின் முடிவில் முதலிடம் பிடிப்பவர்கள் 2024-ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in