பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவு போட்டியிலிருந்து விலகுவதாக வினேஷ் போகாட் அறிவித்திருந்தால், இந்தியாவுக்குப் பதக்கம் கிடைத்திருக்கும் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இது சாத்தியமா..? மல்யுத்த விதி சொல்வது என்ன..?
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றதால் இந்தியாவுக்கு நிச்சயம் தங்கம் அல்லது வெள்ளி எனப் பதக்கம் உறுதியானது. ஆனால், இன்று காலை எடைப் பரிசோதனையின்போது வினேஷ் போகாட் அனுமதிக்கப்பட்ட 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருந்ததாகக் கூறி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எந்தவொரு பதக்கமும் வினேஷ் போகாட்டுக்கு வழங்கப்படாது. இந்தப் பிரிவில் தங்கம் மற்றும் இரு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. பதக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒட்டுமொத்த இந்தியாவும் இந்தச் செய்தியால் உடைந்துபோனது.
இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில், வினேஷ் போகாட் காயம் என்று காரணம் கூறி போட்டியிலிருந்து விலகியிருந்தால், குறைந்தபட்சம் பதக்கத்தை உறுதி செய்திருக்கலாம் என்று சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
அதாவது இறுதிச் சுற்றுக்கு முன்பு காயம் ஏற்பட்டதாகக் கூறி வினேஷ் போகாட் போட்டியிலிருந்து விலகியிருந்தால், குறைந்தபட்சம் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்கும் என்பது அவர்களுடையக் கருத்தாக உள்ளன.
மல்யுத்த விதிகள் இதை அனுமதிக்குமா?
மல்யுத்த விதிப்படி, எடைப் பரிசோதனையின்போது வீரர்/வீராங்கனை அதில் பங்கெடுக்கவில்லை அல்லது அனுமதிக்கப்பட்ட எடையைக் காட்டிலும் கூடுதல் எடையில் இருந்தால், அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார். மேலும், போட்டி தொடங்கிய முதல் நாளுக்குப் பிறகு அல்லது போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு காயம் ஏற்பட்டாலும்கூட, சம்பந்தப்பட்ட வீரர் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்படும் எடைப் பரிசோதனையில் பங்கெடுக்க வேண்டும்.
எடைப் பரிசோதனையில் பங்கெடுக்காத வீரர்/வீராங்கனை போட்டியின் தரவரிசையில் சம்பந்தப்பட்ட வீரருக்கு தரவரிசைப் புள்ளிகள் வழங்கப்படாமல், கடைசி இடத்துக்குத் தள்ளப்படுவார். எனவே, வினேஷ் போகாட் காயம் என்று கூறி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தாலும், எடைப் பரிசோதனையில் பங்கெடுத்திருக்க வேண்டும். அப்போது 100 கிராம் கூடுதலாக இருந்தது தெரிய வந்திருக்கும்.
வினேஷ் போகாட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தால் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது, பதக்கம் உறுதியாகியிருக்காது.