
மெல்போர்ன் டெஸ்ட் கடைசி நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி தொடரின் நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன்களும் இந்தியா 369 ரன்களும் எடுத்தன.
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து 333 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணியால் 10 பந்துகளை மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. 41 ரன்கள் எடுத்த நேதன் லயன் கடைசி விக்கெட்டாக பும்ராவிடம் வீழ்ந்தார்.
234 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியில் பும்ரா மீண்டும் ஒருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி விளையாட கடைசி நாளில் 92 ஓவர்கள் மீதமிருந்தன. வெற்றிக்கு 340 ரன்கள், டிரா செய்ய 92 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும் என்ற நிலையில் தொடக்க பேட்டர்களாக யஷஸ்வி ஜெயிஸ்வால், கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினார்கள்.
தொடக்கத்தில் தடுப்பாட்டத்துக்கான முனைப்புதான் வெளிப்பட்டது. முதல் 16 ஓவர்களுக்கு விக்கெட்டுகளை கொடுக்காமல் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்கள்.
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், மீண்டும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கான கதவுகளைத் திறந்துவிட்டார். ரோஹித் சர்மா 40 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேஎல் ராகுல் இதே ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஆஸ்திரேலியா உற்சாகம் அடைந்தது.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்டம்புகளுக்கு வெளியே ஸ்டார்க் வீசிய பந்தைத் தொட்டு ஆட்டமிழந்தார். 33 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
ஜெயிஸ்வால், ரிஷப் பந்த் என இரு இடக்கை பேட்டர்கள் தடுப்பாட்டத்தை திடமான முறையில் விளையாடினார்கள். பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்காமல் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களைச் சோர்வடையச் செய்தார்கள்.
உணவு இடைவேளை முதல் தேநீர் இடைவேளை வரை இருவரும் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினார்கள்.
தேநீர் இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி பகுதி ஆட்டத்தில் 38 ஓவர்கள் மீதமுள்ளன. இந்தியாவின் வெற்றிக்கு 228 ரன்கள் தேவைப்படுகின்றன. 228 பந்துகளில் 228 ரன்கள்.
ஆனால் இந்திய அணி டிராவை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
127 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெயிஸ்வால், 63 ரன்களுடனும் ரிஷப் பந்த் 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.