மான்செஸ்டர் டெஸ்ட்: எட்ஜ்பாஸ்டனை போல வரலாற்றைத் திருத்தி எழுதுமா இந்தியா? | Ind v Eng

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் வென்றதன் மூலம், எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியைப் பெற்றது இந்தியா.
மான்செஸ்டர் டெஸ்ட்: எட்ஜ்பாஸ்டனை போல வரலாற்றைத் திருத்தி எழுதுமா இந்தியா? | Ind v Eng
2 min read

இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்டுகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. பிர்மிங்ஹமிலுள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் மான்செஸ்டரிலுள்ள ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் ஜூலை 23 அன்று தொடங்குகிறது. மான்செஸ்டரில் 1936 முதல் 2014 வரை மொத்தம் 9 டெஸ்டுகளில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் ஒரு வெற்றியைக்கூட இந்தியா பெற்றதில்லை. 9 டெஸ்டுகளில் 4-ல் தோல்வியடைந்து, 5-ல் டிரா செய்துள்ளது.

மான்செஸ்டரிலுள்ள ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் இந்தியா

  • டெஸ்ட் - 9

  • வெற்றி - 0

  • தோல்வி - 4

  • டிரா - 5

ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்து 84 டெஸ்டுகளில் விளையாடியுள்ளது. இதில் 33 வெற்றிகளைப் பெற்று 15 தோல்விகளைச் சந்தித்துள்ளது. 36 டெஸ்டுகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்து

  • டெஸ்ட் - 84

  • வெற்றி - 33

  • தோல்வி - 15

  • டிரா - 36

இதுவே 2000-க்கு பிறகு, இந்த மைதானத்தில் இங்கிலாந்து 20 டெஸ்டுகளில் விளையாடியுள்ளது. இதில் 14-ல் வெற்றி பெற்று 2-ல் மட்டுமே தோற்றுள்ளது. 4 டெஸ்டுகள் டிராவில் முடிவடைந்துள்ளன. அண்மைக் கால வரலாற்றைப் பார்க்கும்போது இங்கிலாந்து இந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்து (2000-க்கு பிறகு)

  • டெஸ்ட் - 20

  • வெற்றி - 14

  • தோல்வி - 2

  • டிரா - 4

கடந்தகால தரவுகளை முறியடித்து ஓல்ட் டிரஃபோர்டில் முதல் வெற்றியைப் பெறுமா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பிர்மிங்ஹமிலுள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்த டெஸ்டுக்கு முன் எட்ஜ்பாஸ்டன் தரவுகளை முன்வைத்து பேச்சுகள் எழுந்தன. இந்த டெஸ்டுக்கு முன் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா 8 டெஸ்டுகளில் விளையாடி ஒரு வெற்றியைக்கூட பெறாமல் 7-ல் தோற்று ஒன்றை மட்டும் டிரா செய்திருந்தது.

ஆனால், இந்தத் தரவுகளை உடைத்து இரண்டாவது டெஸ்டில் இந்தியா மிகக் கம்பீரமான வெற்றியைப் பெற்றது. இந்தியாவின் இந்தச் சாதனை மான்செஸ்டரிலுள்ள ஓல்ட் டிரஃபோர்டிலும் தொடருமா? பார்க்கலாம்.

சதத்துக்கு தடுமாறும் இந்திய பேட்டர்கள்

மான்செஸ்டரில் கடைசியாக சதமடித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். ஆகஸ்ட் 14, 1990-ல் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சச்சின் இச்சதத்தை அடித்தார். இதுவே அவருடைய முதல் டெஸ்ட் சதம். இதன்பிறகு, எந்தவொரு இந்திய பேட்டரும் இந்த மைதானத்தில் சதமடிக்கவில்லை.

இந்த வறட்சிக்கு கேஎல் ராகுல், ஷுப்மன் கில், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா என யாராவது முற்றுப்புள்ளி வைப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Ind v Eng | India v England | India vs England | Ind vs Eng | Manchester Test | Old Trafford Stadium | Old Trafford Stadium | India tour of England | India England Test Series

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in