
மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பு சற்று கடினமாகியுள்ளது.
கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான பாக்ஸிங் டே அன்று டபிள்யுடிசி இறுதிச் சுற்றைக் கருத்தில் கொண்டு இரு முக்கிய டெஸ்டுகள் தொடங்கின. செஞ்சூரியனில் பாகிஸ்தானை எதிர்கொண்டது தென்னாப்பிரிக்கா. மெல்போர்னில் இந்தியாவை எதிர்கொண்டது ஆஸ்திரேலியா.
செஞ்சூரியனில் பரபரப்பாக நடைபெற்ற டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்கு முதன்முறையாகத் தகுதி பெற்றது. நடப்பு டபிள்யுடிசியில் 11 டெஸ்டுகளில் விளையாடி 7 வெற்றிகள் மற்றும் 66.67% புள்ளிகளைப் பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா.
இதன்மூலம், இறுதிச் சுற்றில் விளையாட ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை இடையே போட்டி நிலவியது.
மெல்போர்ன் டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பிஜிடி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் 61.46% புள்ளிகளை அடைந்து, புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி 52.78% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
சிட்னி டெஸ்ட்
நடப்பு டபிள்யுடிசியில் இந்திய அணி கடைசியாக சிட்னி டெஸ்டில் விளையாடுகிறது. சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே, டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இந்தியாவால் தக்கவைக்க முடியும்.
சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றால், இந்திய அணியால் நேரடியாக தகுதி பெற முடியாது.
பிஜிடி தொடருக்குப் பிறகு இலங்கை செல்லும் ஆஸ்திரேலியா, இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இலங்கை அணி குறைந்தபட்சம் 1-0 என வெற்றி பெற்றால், இந்திய அணி டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.
சிட்னி டெஸ்ட் டிரா ஆனால், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும்.
பிஜிடி தொடரை இந்திய அணி இழக்கும் பட்சத்தில் டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழக்க நேரிடும்.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான சிட்னி டெஸ்ட் ஜனவரி 3 அன்று தொடங்குகிறது.
இலங்கைக்கான வாய்ப்பு
ஒருவேளை சிட்னி டெஸ்ட் டிரா ஆகி, இலங்கை 2-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் டபிள்யுடிசி இறுதிச்சுற்றில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதலாம்.