
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பு 5 வீரர்களைத் தக்கவைத்த குஜராத் டைடன்ஸ், ஏலத்தில் 20 வீரர்களைத் தேர்வு செய்தது. வழக்கம்போல், இந்த முறையும் குஜராத் அணியில் தமிழக வீரர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.
ஏற்கெனவே சாய் சுதர்சன் ரூ. 8.5 கோடிக்கும், ஷாருக் கானை ரூ. 4 கோடிக்கும் தக்கவைத்த குஜராத், சாய் கிஷோரை ஆர்டிஎம் மூலம் ரூ. 2 கோடிக்கு எடுத்தது. மேலும், வாஷிங்டன் சுந்தரை ரூ. 3.2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கேவுக்கு நிகராக நான்கு தமிழக வீரர்களைக் கொண்டுள்ளது குஜராத்.
அஹமதாபாத் சூழலுக்கு ஏற்ப சிராஜ், ரபாடா, ஜெரால்டு கோட்ஸியா, பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா என வேகப்பந்துவீச்சாளர்கள் படையைச் சரியாகத் தேர்வு செய்து வைத்துள்ளது. ஷமிக்கு மாற்றாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுழற்பந்துவீச்சில் ரஷித் கானுக்கு உதவ சாய் கிஷோருடன் வாஷிங்டன் சுந்தர் இணைவது கூடுதல் பலம். டேவிட் மில்லருக்கு மாற்றாக அவருடைய இடத்தில் ரூதர்ஃபோர்ட், கிளென் ஃபிளிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இடக்கை, வலது கை பேட்டர்கள் என சரியான கலவையாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் கூடுதல் கவனம் பெறுகிறது. ஒரு புறம் பெரிதாக இருக்கும் மைதானங்களில் இடக்கை, வலக்கை பேட்டர்களை மாற்றியனுப்ப இந்த உத்தி உதவும்.
ககிசோ ரபடா, முஹமது சிராஜ், ஜாஸ் பட்லர், ஷுப்மன் கில், ரஷித் கான் ஆகியோருக்கு ரூ. 10 கோடிக்கும் மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. பேட்டிங்கில் மேல் வரிசையில் ஜாஸ் பட்லரின் அதிரடியும் அனுபவமும் ஷுப்மன் கில்லுக்குக் கை கொடுக்கும். நடு வரிசையில் பிரபல பேட்டர்கள் இல்லை.
குஜராத் கடந்தமுறை மோசமாக விளையாடி 8-வது இடத்தையே பிடித்தது. இந்தமுறை நிலைமை மாறுமா?