இந்தியாவுக்கு எதிரான தில்லி டெஸ்டில் ஃபாலோ ஆன் செய்து வரும் மேற்கிந்தியத் தீவுகள், 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் தில்லியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்து தடுமாறி வந்தது.
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் ஆதிக்கம் செலுத்த, மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்கள் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறினார்கள். கேரி பியர் மற்றும் ஆண்டர்சன் ஃபிலிப் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினாலும், தேவையான ரன் கிடைக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணி 248 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய அணியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் முஹமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
270 ரன்கள் பின்தங்கியிருந்ததால், மேற்கிந்தியத் தீவுகளை ஃபாலோ ஆன் செய்யுமாறு அழைத்தது இந்தியா. மேற்கிந்தியத் தீவுகள் தொடக்க பேட்டர் டேஜ்நரைன் சந்தர்பால் 10 ரன்களுக்கு சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலிக் ஆதனேஸ் 7 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் சுழலில் ஆட்டமிழந்தார். தேநீர் இடைவேளையில் மேற்கிந்தியத் தீவுகள் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து மீண்டும் தடுமாற்ற நிலையில் இருந்தது.
ஆனால், ஜான் கேம்பெல் மற்றும் ஷே ஹோப் சிறப்பாகக் கூட்டணியைக் கட்டமைத்தார்கள். சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், ஸ்வீப் ஷாட்களை வெளியில் கொண்டு வந்தார் கேம்பெல். இருவரும் ஸ்டிரைக்கை மாற்றி விளையாடியதால், இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் வீழ்த்துவது சிரமமானது. இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 47 பந்துகளில் 50 ரன்களை கடந்தது. 33-வது ஓவரில் தான் பும்ரா தனது முதல் ஓவரை வீசினார். இவர் வந்தும் விக்கெட் கிடைக்கவில்லை.
கேம்பெல் 69 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஹோப் 80 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருவரும் மூன்றாவது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை இழக்காமல் திடமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து இன்னும் 97 ரன்கள் பின்தங்கியுள்ளது. கேம்பெல் 87 ரன்கள் மற்றும் ஷே ஹோப் 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.
நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் மாற்று திட்டங்களுடன் களமிறங்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Ind v WI | India v Windies | India v West Indies | Kuldeep Yadav | John Campbell | Shai Hope | Delhi Test |