
ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான கேம்ரூன் கிரீன் தன்னுடைய சிறுவயது முதல் இருக்கக்கூடிய சிறுநீரக நோய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்டில் 11 பேர் கொண்ட அணியில் கேம்ரூன் கிரீன் இடம்பெறவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த கேம்ரூன் கிரீன் அவருடைய நீண்டகால நோய் குறித்துப் பேசியதாவது:
நான் பிறக்கும்போது எனக்குச் சிறுநீரக நோய் இருப்பதாக என் பெற்றோர்களிடம் அறிவிக்கப்பட்டது. பொதுவாக இதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை, அல்ட்ராசவுண்ட் மூலமாகவே கண்டறியப்படும். இந்நோய் இருப்பதால் சிறுநீரக செயல்பாட்டில் தொந்தரவு ஏற்படும். துரதிஷ்டவசமாக மற்ற சிறுநீரகங்கள் போல என்னுடைய சிறுநீரகம் ரத்தத்தை வடிகட்டாது. இது தற்போது 2-வது கட்டத்தில் உள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட மற்றவர்களை போல் எனக்கு உடலளவில் எந்த தொந்தரவும் இல்லை. இதில் 5 கட்டம் உள்ளது. முதல் கட்டத்தில் அவ்வளவு பாதிப்பு இருக்காது, 5-வது கட்டத்தில் இருந்தால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்படலாம். நான் 2-வது கட்டத்தில் உள்ளேன். ஆரம்பத்திலேயே இதைக் கண்காணிக்கவில்லை என்றால் தீவிரம் அடைந்துவிடும். இந்த நோயைப் பொறுத்தவரை சிறுநீரகம் குணமடையாது, ஆனால் மெதுவாக சில முன்னேற்றங்களை காணலாம்”.
கிரீனின் தாயின் கர்ப்பக் காலத்தின் 19-வது வாரத்தில் இது கண்டறியப்பட்டுள்ளது. தனது மகன் 12 வயதுக்குப் பிறகு வாழ்வதே சந்தேகம் என்று நினைத்ததாக கிரீனின் தந்தை கூறியுள்ளார்.
மேலும் இந்த நோய் குறித்து கிரீன் பேசியதாவது, "ஒரு நாள் முழுக்க நிறைய பந்துவீசி, நிறைய பேட்டிங்கும் ஆடிய பின்னர் எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. சிறுநீரக நோயால் தான் இவ்வாறு நடந்தது என்பதை உணரவே எனக்கு நீண்ட நேரம் எடுத்தது. பொதுவாக நான் சரியாக நீர் அருந்துவதில்லை, சரியாக உணவு எடுத்துக்கொள்வதில்லை, என்னை நானே சரியாக பார்த்துக்கொள்வதில்லை என்று எண்ணினேன். பின்னர் தான் புரிந்தது, நான் அனைத்துமே சரியாக செய்தும் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. ஆஸ்திரேலிய அணியில் உள்ள அனைவருக்கும் இந்த நோய் குறித்துத் தெரியும். தசைப்பிடிப்பால் அவதிப்படும் போது இப்பிரச்னை, தொழில்முறைக் காரணங்களைத் தாண்டியது என்பதை அவர்களுக்கு உணர்த்தினேன் என்றார்.